Press "Enter" to skip to content

சிறுவர்களுக்கு மட்டும் பைசரை ஒதுக்கவும்

ஆரம்பத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தி பூரணப்படுத்த நாம் அரசாங்கத்திடம் கோரியிருந்தாலும் துரதிஸ்டவசமாக அது உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே, அதில் ஏற்பட்ட தாமதத்தால் கடந்த காலங்களில் கொரோனா மரணங்கள் அதிகரித்திருந்தன என்றார்.

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், எமது நாட்டில் தற்போது சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதுடன், கொரோனாவினால் சிறுவர்களின் இறப்பு வீதமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பைசர் தடுப்பூசிதான் உலகளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு ஏற்றப்பட வேண்டிய ஒரே சிறந்த தடுப்பூசி என பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

ஆனால் தற்போது எமது நாட்டில் சிறுவர்களுக்கு பதிலாக இந்த தடுப்பூசி பல பிரதேசங்களிலும்
பல்வேறு வயது மட்டங்களின் கீழ், அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு அமைய
செலுத்தப்படுகின்றது.

விசேட வைத்தியர் குழுவின் கோரிக்கைக்கு அப்பால் இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படுவதுடன்,
இதனால் ஏற்படும் முரண்பாடுகளால் விசேட வைத்திய குழுவிலிருந்து வைத்தியர்களும்
விலகுகின்றனர்.

எனவே, இந்த முரண்பாடு எதிர்காலத்தில் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்பதுடன், சிறுவர்கள்
தொற்றுக்கு உள்ளாவதும், இறப்பும் அதிகரிப்பதால் பைசர் தடுப்பூசியை சிறுவர்களுக்கு ஏற்ற
நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை
சிறுவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் கோரிக்கை விடுத்தாலும்
மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற அழுத்தம் கொடுக்க எந்த​வோர் ஆசிரிய தொழிற்சங்கமும்
முன்வரவில்லை என்றார்.

ஆசிரியர்களது கோரிக்கை போலவே சிறுவர்களுக்காகவும் குரல்கொடுத்து, தடுப்பூசியை
செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

எனவே, கிடைக்கவுள்ள பைசர் தடுப்பூயை சிறுவர்களுக்கு ஒதுக்கவும் எனத் தெரிவித்த அவர்,
ஏனைய வயது பிரிவினருக்கு ஏனைய தடுப்பூசிகள் உள்ளதால் இவற்றை சிறுவர்களுக்காக
ஒதுக்கவும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.

இல்லையேல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் அண்மையில் சந்திக்கும் துரதிஸ்ட
சம்பவங்கள் போல், சிறுவர்கள் தொடர்பிலும் சந்திக்க நேரிடும் என்றார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: