சுமந்திரன் இல்லாமல் மத்தியகுழு கூட்டத்தை நடத்த முடியாத தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்காக எப்படி போராட முடியும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று தமிழர்களுக்கு ஆபத்தான நாள். ஏனென்றால் சுமந்திரன் அமெரிக்காவில் இருக்கிறார். அமெரிக்காவிலிருந்து .சுமந்திரன் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தை நிறுத்த முடிந்தால், 95% க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களால் கூட்டத்தை நடத்துவதற்கான உரிமைக்கு போராட முடியாதெனின், தமிழர்களின் உரிமைக்காக இந்தக் கட்சி எவ்வாறு போராட முடியும் என்பதை இது எடுத்து காட்டுகிறது.
ஜி.எல்.பீரிஸ் மற்றும் ராஜபக்சக்களைச் சந்தித்த பின்னர், சுமந்திரன் மூலம் இலங்கையின் செய்தியை வெளிப்படுத்தவே இந்த அமெரிக்கச் சந்திப்பு என்பதை தமிழர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். சுமந்திரனை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் அரசு கட்சியை வலியுறுத்துகிறோம்.
கதிர்காமர் ஒரு அமைச்சராக, தமிழரின் சுதந்திரப் போராட்டத்தை சட்டவிரோதமாக்க உலகம் முழுவதும் பயணம் செய்தார். இப்போது கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளராக சுமந்திரன், கதிர்காமர் போல உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். கதிர்காமர் உயிருடன் இருந்திருந்தால் சுமந்திரன் என்ன செய்கிறாரோ அதையே அவர் செய்வார், அதாவது ஐசிசி வழக்கின் பொறியை அழிப்பார்.
சுமந்திரன் சிங்கள குடியேற்றத்தை ஊக்குவிக்கிறார். சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன், சத்தியலிங்கம் முன்னிலையில் நெடுங்கேணியில் 4000 சிங்களவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டமைக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. பௌத்தத்திற்கு முதன்மையான இடம் கொடுத்தார். வடகிழக்கு இணைப்புக்கு சதி செய்துள்ளார்.
ஏக்கிய ராஜ்ஜியவுக்கு சரி என்கிறார். இது ஒற்றையாட்சி, தமிழர்களின் சமஷ்டி எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது, அது எங்குள்ளது என்பது அவருக்கும் தெரியாது. முன்னாள் எம்.பி அரியநேந்திரன், நேற்று சுமந்திரன் மீது குற்றம் சாட்டுகிறார். முஸ்லிம்களை ஆட்சி செய்ய அனுமதித்ததன் மூலம் தமிழர்கள் மட்டக்களப்பில் ஓரிரு எம்.பி ஆசனங்களை இழந்தனர் என்றும்,
லண்டனில் உள்ள பல புலம்பெயர் தமிழர்கள் தங்கள் கொடூரமான கதையை ஐசிசியின் வழக்கறிஞருக்கு அனுப்பி பல ஆபத்துக்களை எடுத்தனர். இப்போது சுமந்திரன் இம்முயற்சியை அழிக்க நினைக்கிறார். சுமந்திரனின் சதி என்னவென்றால் ஐசிசியின் வழக்குரைஞர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது அவரது வாதம்.
ஐசிசி வழக்கை எடுத்தால் கொழும்பில் சிங்களவர்கள் மத்தியில் வாழும் சுமந்திரன் போன்றோருக்கு பாதுகாப்பு கிடைக்காது. கொழும்பில் உள்ள சிங்களக் கும்பலால் அச்சுறுத்தப்படுவார்கள். ஆம், அது அவரின் நியாயமான கருத்து . எனவே தமிழ் அரசியலை விட்டு வெளியேறி கொழும்பில் தங்குவது அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
சிங்களவர்கள் விரும்பாத எந்தவொரு அரசியல் தீர்வும் சிங்களவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் எப்போதும் வாதிடுகிறார். சுமந்திரனை தமிழ் அரசு கட்சி நீக்க வேண்டும் என்பதே சரியானது . அவர் தமிழ் அரசு கட்சியை விட்டு வெளியேறியவுடன் கொழும்பில் பாதுகாப்பாக இருப்பார் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது
Be First to Comment