Press "Enter" to skip to content

நெஞ்சை உருக்கும் சோகம் உணவிட முடியாத தந்தை தற்கொலை

பிள்ளைகளுக்கும் மனைவிக்கு வேளா வேளைக்கு உணவு கொடுக்க முடியாமையால் அக்குடும்பத் தலைவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், களுத்துறை மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால், 12 வயதுக்கு கீ​ழே நான்கு பிள்ளைகளும் அவரது மனைவியும் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

தனது கணவனின் சடலத்தை பார்த்தவுடன் கதறியழுத மனைவி, அங்கு மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில் சாட்சியமளிக்கையில்,

கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே சாப்பாட்டுக்கு வீட்டில் ஒன்றுமே இருக்கவில்லை.  பிள்ளைகளுக்காவது சாப்பாட்டுக்கு ஏதாவது தேடிக்கொண்டு வருகின்றேன் எனக்கூறிவிட்டு கணவன் சென்றுவிட்டார். வீட்டுக்குத் திரும்பி வராமையால், நாற்காலிகள் இரண்டை விற்று பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக்கொடுத்தேன் என சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

வெலிப்பென்ன, பிரதேசத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டவரின் மரண விசாரணை மரண பரிசோதனை அதிகாரியின் முன்னிலையில் நடந்தது.

வெலிப்பென்ன, ஹோன்போன் பிரதேசத்தில் வசிப்பவர் நாகராஜ் ரஞ்சன், 37 வயதானவர். இவருடைய மனைவி மாடசாமி மஞ்சுளா 30 வயதானவர். இவ்விருவரும் திருமணம் முடித்து 14 வருடங்களாகின்றன. அவ்விருவருக்கும் 12 வயதுக்கு கீழ், நான்கு பிள்ளைகள் இருகின்றனர். அதிலொருவர் பெண் பிள்ளையாவார்.

அவரது மனைவி  தொடர்ந்து சாட்சியமளிக்கையில்…

தெபுவன, நேபொட பிரதேசங்களில் வசித்த தாங்கள் இருவரும், இன்றைக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், கணவனுக்கு வேலைத்தேடிக்கொண்டு பிள்ளைகளுடன் ​வெலிப்பென்ன பிரதேசத்துக்கு வந்தோம்.

அங்கு மாதாந்தம் 3, 500 ரூபாய்க்கு வாடகைக்கு வீடொன்றை பெற்று பிள்ளைகளுடன் வசித்துவருகின்றோம். கூலி வேலைச்செய்யும் கணவனுக்கு கடந்த சில நாட்களாக முறையாக வேலைக் கிடைக்கவில்லை. பிள்ளைகள் அனைவரும் சிறியவர்கள் என்பதனால், வீட்டில் தனியாக விட்டுவிட்டு தன்னால் வேலைக்குச் செல்லமுடியவில்லை என்று  தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி நிரந்த வசிப்பிடத்துக்கான ஆவணங்கள் இன்மையால், பிள்ளைகளை பாடசாலைக்குச் சேர்க்க முடியாமற் போய்விட்டது என்றும் சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளார், கடந்த மூன்று நாட்களாக சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை. பணமோ அல்லது கடனுக்கு சாப்பாட்டு பொருட்களை கேட்டால் யாருமே உதவிச்செய்யவில்லை என்றும் இதனால் தன்னுடைய கணவன் மனவிரக்தியில் இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

சாப்பாட்டுக்கு ஏதாவது தேடிக்கொண்டு வருகின்றேன் எனக் கூறிவிட்டு கடந்த வௌ்ளிக்கிழமை சென்றவர். அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் பிள்ளைகள் பசியோடு இருந்தமையால் வீட்டிலிருந்த இரண்டு நாற்காலிகளை விற்றுவிட்டு, உணவு உண்டோம். அவருடைய கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தபோது பதில் எதுவுமே இல்லை.

இந்நிலையில்தான், கணவனின் உறவினர் வீட்டுக்கு அருகில், கணவன் உயிரிழந்து கிடப்பதாக தகவல்கள் கிடைத்தன என தன்னுயிரை மாய்த்துக்கொண்ட   நாகராஜ் ரஞ்சனின் மாடசாமி மஞ்சுளா தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *