எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்பட்டுள்ள நீண்ட காத்திருப்பு வரிசை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் அகற்ற முடியும் என பெற்றோலிய மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஞாயிற்று கிழமைகளில் எரிபொருள் பகிர்ந்தளிப்பு முன்னெடுக்கப்படாத போதிலும் இன்று எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் 7 ,000 மெட்ரிக் டன் டீசல் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றைய தினமும் 8,000 மெட்ரிக் டன் டீசலை பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்பட்டுள்ள நீண்ட காத்திருப்பு வரிசை அகற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினமும் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் சாரதிகள் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
மின்சார உற்பத்திற்கு தேவையான டீசல் தற்போது வழங்கப்படுவதோடு களனிதிஸ்ஸ மின்முனையத்திற்கு டீசல் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 4, 000 மெட்ரிக் டன் அளவான டீசல் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்னுற்பத்திக்கு தேவையாக எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை கனியவள கூட்டுதாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்முனையங்களுக்கு தேவையான 30, 000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் ஒன்று நாளை(7) நாட்டை வந்தடையவுள்ளது. அதற்கான கட்டணம் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
Be First to Comment