உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 13-வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. சில நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக ரஷிய படைகள் கூறி வருகின்றன. ஆனால் அது செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன. உக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷிய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ராணுவ தளங்களை தாக்குகிறோம் எனக்கூறும் ரஷிய படையினர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என தாக்குதலை விரிவுபடுத்துகின்றன.
கீவின் அண்டை நகரான ஹாஸ்டோமல் நகர மேயர் யூரி புரைலிப்கோ உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து உதவுவதற்காக வெளியே வந்தபோது துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.
இந்நிலையில், கார்கிவ் அருகே ரஷிய மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவை உக்ரைன் படைகள் கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஜெனரல் ஜெராசிமோவ் ஒரு மூத்த ராணுவ அதிகாரி, இரண்டாவது செச்சென் போரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment