Press "Enter" to skip to content

ரஷியா – உக்ரைன் போரில் எதிர்பாராத திடீர் திருப்பம்!

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள உக்கிரமான போர், சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு திடீர் திருப்பத்தை சந்தித்துள்ளது.

சோவித் யூனியன் 1991-ம் ஆண்டு சிதறியபோது, உக்ரைன் பிரிந்து வந்து தனி நாடானது. ஆனால் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னோடு இணைத்துக்கொண்ட பிறகு ரஷியாவுக்கு மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்க வேண்டும் என்ற கனவு உருவானது. அந்த கனவை புரிந்துகொண்ட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பில் சேரத் தயார் ஆனார். நேட்டோ நாடுகளில் ஒன்றுக்கு ஆபத்து என்றாலும், அந்த நாட்டைக் காக்க பிற உறுப்புநாடுகள் ஒரே குடையின் கீழ் இணையும்.

உக்ரைனின் நேட்டோ கனவு, ரஷியாவின் சோவியத் யூனியன் கனவுக்கு தடையாக அமைந்தது. இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் அதிரடியாக படைகளைக் குவித்த ரஷியா, உக்ரைனின் நேட்டோ கனவுக்கு எதிராக கடந்த மாதம் 24-ந் திகதி போரைத் தொடங்கியது.

இந்த போர் நேற்று 14-ம் நாளை எட்டியது. இந்த 14 நாட்களில் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

இந்த போர் இரு நாடுகளையும் தாண்டி உலக அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.

ஆனாலும் அசராத ரஷியா, உக்ரைனை ஒழித்துக்கட்டுவதில் தீவிரம் காட்டியது. முக்கிய நகரமான கெர்சனையும், இன்னும் சில சிறிய நகரங்களையும் வசப்படுத்தி, தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பெரிய நகரங்களையும், துறைமுக நகரங்களையும் குறிவைத்து காய்களை நகர்த்தியது.

செர்னிஹிவ் நகரில் குடியிருப்புகள், பண்ணைகளில் ரஷிய படைகள் ராணுவ தளவாடங்களை குவித்தன.

மரியுபோல் நகரம் ரஷிய படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. அசோவ் கடல் நகரமான இங்கு வீதிகளில் சடலங்கள் வாரியிறைத்து கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

20 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு படையெடுத்தனர். ரஷியா, உக்ரைன் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

போர் உக்கிரம் அடைந்ததால் அங்கு தங்கி இருந்த பிற நாட்டினர் வெளியேறத்துடித்தனர். பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தங்களை அறிவித்து, வெளிநாட்டினர் பத்திரமாக வெளியேற இருநாடுகளும் வழிவகுத்து தந்தன.

போரின் 14-வது நாளான நேற்று தலைநகர் கீவில் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்தவண்ணம் இருந்தன. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் படைகளும் வரிந்து கட்டின. பெண்களும், குழந்தைகளும் சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களில் தொடர்ந்து தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனாலும் குறிப்பிடத்தக்க அளவில் அங்கு எந்தவொரு தாக்குதலும் நடைபெற்றதாக தகவல் இல்லை.

மாறாக நேற்றும் சுமி உள்ளிட்ட நகரங்களில் 6 இடங்களில் பொதுமக்களை வெளியேற்றும் பணி, போர் நிறுத்தத்துக்கு மத்தியில் நடந்தது.

கீவ்வின் புறநகர் பகுதிகளில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கட்டிடங்களை தரை மட்டமாக்கின. கடந்த மாதம் ரஷிய படைகளால் கைப்பற்றப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையம், சர்வதேச அணுசக்தி முகமைக்கு தரவுகள் அனுப்புவதை நிறுத்தி உள்ளது. இது ரஷிய துருப்புகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

போரால் உக்ரைன் மட்டுமல்லாது ரஷியாவும் பெரும்பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், இரு தரப்பும் தங்கள் பிடிவாதங்களைக் கைவிட்டு இணக்கமான சூழலுக்கு வழிவகுத்து வருவது ஒரு திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து குண்டு மழை பொழிந்து, ஏவுகணைகளை வீசி, பீரங்கி தாக்குதல் நடத்தி வந்த ரஷியா, கடந்த 2 நாட்களாக அடக்கி வாசிக்கிறது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஏ.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி, அவர் சமாதான கொடி நாட்டுவதற்கு தயாராகி விட்டார் என தெளிவுபடுத்துகிறது.

இந்த பேட்டியில் அவர் கூறிய முக்கிய தகவல்கள்:-

* சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கும், ரஷியாவுடனான மோதலுக்கும் நேட்டோ அமைப்பு பயப்படுகிறது. உக்ரைனை ஏற்க நேட்டோ தயாராக இல்லை என்பதை புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் நான் அமைதியாகி விட்டேன். எதையும் காலில் விழுந்து பெறுகிற நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது.

* கிழக்கு உக்ரைனின் டான்பாஸ், லுகான்ஸ்க் ஆகிய 2 ரஷிய சார்பு பிரதேசங்களின் நிலை குறித்து சமரசம் செய்ய தயார். (இவ்விரு பகுதிகளையும் உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ரஷியா சுதந்திர பகுதிகளாக அங்கீகரித்துள்ளது.)

* கிரீமியாவை ரஷியாவின் அங்கம் என அங்கீகரிக்கும் விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார்.

இவ்வாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.

இப்படி, ரஷியா எந்த நோக்கங்களுக்காக போர் தொடங்கியதோ, அவற்றில் எல்லாம் இப்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இறங்கி வந்திருப்பதால், போர் முடிவுக்கு வர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மேலும், உக்ரைன் மற்றும் ரஷிய வெளியுறவு மந்திரிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் துருக்கி அதிபர் எர்டோகன் மத்தியஸ்தராக இருப்பார் என தெரிய வந்துள்ளது.

இரு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் உதவிக்கரம் நீட்டுகிறார். அவர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். வரும் சனிக்கிழமை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரடியாக சந்தித்து பேச உள்ளார்.

எனவே ரஷியா, உக்ரைன் போர் அடுத்த சில நாட்களில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *