Press "Enter" to skip to content

மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய பக்தர்களுடன் கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் –இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு!

இலங்கை – இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது.

இன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ள கச்சதீவு அத்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் பங்குபற்றுவதற்கு இலங்கை – இந்தியப் பக்தர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு நாடுகளையும் சேர்ந்த கடற்றொழிலாளர்களிடையே நல்லெண்ண சந்திப்பு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருவிழாவில் பங்கேற்பதற்காக கச்சதீவு சென்றுள்ளார்.

இதேவேளை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையிலிருந்து கச்சதீவு செல்வதற்காக பொதுமக்கள் குறிக்கட்டுவானில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இன்று மதியம் ஒரு மணியளவில் குறிகட்டுவானிலில் தரித்து நின்ற வடதாரகை மூலம் கச்சதீவு செல்வதற்கான படகு பயணத்தை இலங்கை கடற்படை ஒழுங்கு செய்திருந்தது.

மதகுருமார், பக்தர்கள், சுகாதார பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக சிநேகபூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக வடபகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர் சங்க பிரதிநிகளும் கச்சதீவுக்கு பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1974 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தந்தின் அடிப்படையில் கச்சதீவு  இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

இந்தியாவின் இராமநாதபுரத்தில் இருந்து 12.4 கடல் மைல் தொலைவிலும் நெடுந்தீவில் இருந்து 10.5 கடல் மைல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது.

கச்சத்தீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டாலும் அதிலுள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் வருடாந்தம் இந்திய பக்தர்களும்  இலங்கை பக்தர்களும் சகோதரத்துவ உணர்வுடன் இணைந்தே பங்கேற்று வருகின்றனர்.

இருதரப்பு மீனவர்களின் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையிலும், COVID தொற்று நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையிலும் இம்முறை திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவான பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் 80 பேர் பங்ககேற்கவுள்ள அதே வேளை ராமேஸ்வரம் மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து பக்தர்கள் இன்று கச்சதீவு வருகைதந்துள்ளனர்.

கச்சத்தீவு செல்லும் இந்திய பக்தர்களை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் வைத்து சுங்கத்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முழுமையாக சோதனை செய்த பின் படகுகளில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பக்தர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின் பற்றி கச்சத்தீவு ஆலய திருவிழாவில்  கலந்து கொள்ள வேண்டும் என ராமநாதபுரம்  மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமான பின்னர் தேர் பவனி, பிராத்தனைகள் நடைபெறும்.

அத்தோடு நாளை காலை இலங்கை இந்திய பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது.

இதற்கான முழு ஏற்பாடுகளையும் யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *