அதிகார ஆணவத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரால் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை சொல்லி மாளாது.
போர் காரணமாக பல லட்சம் மக்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வரும் அதே வேளையில் இன்னும் பல லட்சம் மக்கள் தாயகத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே உள்ளனர்.
16-வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சுமார் 4½ லட்சம் பேர் வாழும் மரியுபோல் நகரம், ரஷிய படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால் சின்னாபின்னமாகி உள்ள நிலையில் அந்த நகர மக்கள் உணவுக்காகவும், எரிபொருளுக்காகவும் வீதிகளில் அலைந்து வருகின்றனர்.
அதோடு உணவுக்காக ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் அவலநிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மருந்துகடைகளை மக்கள் சூறையாடி பொருட்களை அள்ளி சென்றதால் அவை காலியாக கிடக்கின்றன.
அந்த நகரில் காய்கறிகள் கள்ளசந்தையில் விற்கப்படும் நிலையில், இறைச்சிகள் எட்டாக்கனியாக மாறியுள்ளன. பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் இருந்து மக்கள் பெட்ரோலை திருடி செல்கின்றனர்.
அங்கு பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, செல்போன் சேவையும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் மரியுபோல் நகர மக்கள் நரக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
Be First to Comment