பேசாலை பகுதியில் காற்றாலை மின் உற்பத்திப் கட்டமைப்பின் இரண்டாம் கட்டத்தினை தனியார் முதலீட்டுடன் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த திட்டத்தினால் தங்களது வளங்களுக்கும் எதிர்கால இருப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படப் போவதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த சம்மந்தப்பட்ட கிராம மற்றும் சமூகப் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களையும் அச்சதனதினையும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
அதேபோன்று, இல்மனைட் அகழ்வு தொடர்பான ஆய்வுகள் மற்றும் சட்ட விரோத தொழில் முறைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறித்த சந்திப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரென்லி டி மெல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வைப்பதற்காக வருகை தந்திருந்த இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மற்றைய சந்திப்பில் பேசாலை பங்குத் தத்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை செவிமடுத்த கடற்றொழில் அமைச்சர், பிரதேச மக்களுக்களின் கருத்துக்களையும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களும் ஆராயப்படும் எனவும் மக்களுக்கு நன்மை பயக்கின்ற விடயங்களே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எனவே இவ்விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்
Be First to Comment