அன்புடனும் அக்கறையுடனும் இந்திய அரசாங்கத்திடமிருந்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு காரணங்களினால் வாழ்வாதார பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ள இந்திய அரசாங்கம் முதல் கடடமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. –
இந்நிலையில் பல்வேறு உதவிகளை வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு தயாராகி வருவதாக இந்தியத் தரப்புக்களிடம் இருந்து வெளிவரும் செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது.
அவை, தொழில் உபகரணங்கள் – கட்டுமானங்கள் – முதலீடுகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களாக வடக்கு கடற்றொழிலாளர்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லை கடற்றொழிலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நிகழ்வில் தெரிவித்த இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன், இலங்கைக்கு ஏற்படும் எந்தவிதமான தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு இந்திய தயாராக இருப்பதான, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரின் அண்மைய கருத்தினையும் நினைவுபடுத்தினார்.
இதனிடையே நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சீரின்மை காரணமாக கடற்றொழில் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபடுவோர் அசௌகரியங்களை எதிர்கொள்ளுகின்றனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று, எரிபொருள் விநியோகம் தொடர்பாக கேட்டறிந்துடன், எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் வரையில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment