2009இற்கு முன்பு இருந்த கூட்டமைப்பு வேறு, 2009இற்கு பிற்பாடு இருக்கும் கூட்டமைப்பு வேறு. 2009இற்குப் பின்னர் தனிக் கட்சி, தனிமனித கௌரவம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டிருக்கின்றது எனக் கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியனா தமிழீழ விடுதலை இயக்கம்.
அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ‘2010 தேர்தலுடன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. 2015 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஈ. பி. ஆர். எல். எவ். வெளியேறியது. வட மாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனை முதலமைச்சராகக் கொண்டு வந்தவர்களே அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்.
இன்று மூன்று கட்சிகள்தான் கூட்டமைப்புக்குள் இருக்கின்றன. அதிலும் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம்தான் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது. தமிழ் அரசுக் கட்சிகூட 2001 கூட்டமைப்பு தொடங்கப்பட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவே அதில் அங்கம் வகித்தது. 2004இலே ஆனந்தசங்கரி கூட்டமைப்பின் அப்போதைய சின்னமான உதயசூரியனை கொண்டு சென்றமையால் சுமார் 34 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் அரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னம் தூசு தட்டி எடுக்கப்பட்டதுதான் வரலாறு.
கூட்டமைப்பைச் சிதைப்பதற்கு அல்லது அதிலிருந்து தாங்கள் வெளியேறுவதற்கு கூட்டமைப்பை மேலும் பலவீனமாக்குவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். பல உதாசீனங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதன் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009இற்குப் பின்னர் இந்தளவுக்கு பின்னடவைச் சந்தித்திருக்கின்றது.
ஏனெனில் 2004லே 24 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த நாங்கள் அதன் பின்னர் படிப்படியாக 18, 16 என்றாகி இன்று தேசியப் பட்டியலுடன் சேர்த்து 10இற்கு வந்து நிற்கின்றோம். இந்த நிலைமை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் எவ்வாறு எங்களது மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதை உணர்ந்து இந்தக் கட்சிகள் செயல்பட வேண்டும் – என்றார்
Be First to Comment