எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பின்னடைவு ஏற்படுவதற்கு வழிவகுத்ததன் பின்னர், சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.
ஆளும் கட்சியின் 2 அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்திற்குள் பாரிய பிரச்சினை ஏற்பட்டது.
இவ்வாறான சூழலில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான சந்திப்பின் போது, சர்வ கட்சி மாநாட்டுக்கான இணக்கம் வெளியிடப்பட்டிருந்தது.
எனவே, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் உள்ள அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாறாக பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கல்ல.
எனவே தேசிய மக்கள் சக்தி இந்த மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் குறித்த சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருந்தனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சகல கட்சிகளிடம் இருந்து யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சர்வ கட்சி மாநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தது.
இதற்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த முறை சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அதன் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
Be First to Comment