ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் கலந்து கொள்ளும் என்று அதன் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருந்தார்.
ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ என அறியப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் இதில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா? என்று எமது செய்திச் சேவை, இன்று முற்பகல் எம்.ஏ.சுமந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளது என்றும், மற்றையவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை என்றால் அது குறித்து அவர்களிடமே கேட்க வேண்டும்’ என்றும் பதிலளித்தார்.
இதுதொடர்பாக டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், இந்த மாநாட்டுக்கான அழைப்பு தனித்தனியாக அனைத்து கட்சிகளுக்கும் கிடைக்கப்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம், சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ள நிலையில், அதன் பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில், மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பனவும் மாநாட்டில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காது என அதன் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்
Be First to Comment