பருத்தித்துறை, குருநகர், பேசாலை, பலப்பிட்டிய போன்ற இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இந்தியாவுடன் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் நேற்று (21.03.2022) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இந்தியத் தலைவர்களுக்கும் இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்தியத் தரப்புக்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பலனாக, பரஸ்பர உடன்பாடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மேற்குறிப்பிட்ட இடங்கள் உட்பட அவசியமான இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசு ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment