Press "Enter" to skip to content

தமிழகத்தில் புகலிடம் கோரி சென்ற இலங்கையரில் ஐவருக்கு பிணை!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புகலிடம் கோரிச் சென்ற நிலையில், கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் இராமேஸ்வரம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இலங்கையிலிருந்து கடந்த 22 ஆம் திகதி 16 பேர் தமிழகம் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஐவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஏனைய 11 பேரும், மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்கும் பிணைகோரி தமிழக அரசின் சார்பில், இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அழைத்துவர கடலோர பாதுகாப்புக் குழு காவல்துறையினர் சென்னை சென்றுள்ளனர்.

அவர்கள் அழைத்து வரப்பட்டதும் மண்டபம் முகாம் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புடன் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஜெசிந்தா லாஸரஸ், நேற்றைய தினம் குறித்த முகாமுக்குச் சென்று நிலைமைகளை ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *