Press "Enter" to skip to content

காணி சுவீகரிப்பு நிறுத்தப்படும் ஜனாதிபதி கூட்டமைப்பினரிடம் உறுதி!

தமிழர் பிரதேசங்களில் இராணுவம், தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும். இதேவேளை, கூட்டமைப்புடன் பேசாமல் வடக்கு, கிழக்கில் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் விதமாக நடைபெறுவதாகக் கூறப்படும் விடயங்களை முன்னெடுக்க மாட்டோம் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய பிரச்னைகளுக்கு இணக்கம் காண உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகிய கட்சிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடல் நடைபெற்றது. ரெலோ இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இந்தச் சந்திப்பு நடந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, அமைச்சர்களான சமல் ராஜபக்‌ச, ஜீ. எல்.பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் அரச தரப்பில் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், தவராசா கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழர்களின் இனப்பிரச்சினை வரலாற்றைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, அரசுகள் மாறி மாறி ஏமாற்றி வரும் வரலாற்றைத் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு

இரு தரப்பு கருத்துப் பகிர்வின் பின்னர், அரசியல் தீர்வு குறித்து முதலில் பேசப்பட்டது.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்துள்ளது. அது இப்போது மொழிபெயர்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது வந்ததும் அதன் அடிப்படையில் அரசியல் தீர்வு குறித்து பேச்சு நடத்தலாம் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டார்.

அந்த மொழிபெயர்ப்புடன் அந்த யோசனை வெளிவருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று சம்பந்தன் கேட்டார். இரண்டு மாதங்கள் என்று பதில் அளிக்கப்பட்டது.

அப்படியானால், அரசியல் தீர்வு விடயத்தை இரண்டு மாதம் கழித்துப் பேசலாம். அதற்கு முன்னர் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம். அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னர் அதில் இருந்து அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம் என்று இரண்டு தரப்பினரும் இணக்கம் கண்டனர்.

அரசியல் பிரச்சினைகள் பற்றிய பேச்சுகள் ஆரம்பமாக முன்னர் உடனடியாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை முன்வைத்தால் அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதியும் குறிப்பிட்டார்.

அந்த அடிப்படையில் நான்கு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டன.

கைதிகள் பிரச்சினை

தமிழ் அரசியல் கைதிகளின் விவரத்தைக் கூட்டமைப்புத் தூதுக்குழு சுட்டிக்காட்டியது. கூட்டமைப்பினரிடம் நேற்று அரசியல் கைதிகள் விவரம் உறவினர்களால் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த விவரத்தின் அடிப்படையில் 48 அரசியல் கைதிகள் 10 வருடங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும், இன்னும் பலர் வழக்கு தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சுட்டிக்காட்டப்பட்டது.

நீண்ட காலமாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியையும் சுமந்திரனையும் – ஒவ்வொரு கைதியின் விடயத்தையும் தனித் தனியாக ஆராய்ந்து, புதிய பரிந்துரையைக் கூட்டாகத் தமக்குச் சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கூறினார். அந்தப் பரிந்துரையின்படி தாம் நடவடிக்கை எடுப்பார் என்றார் ஜனாதிபதி. வழக்கு இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது, ஏனையோரை விரைந்து உடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

அண்மையில் கைதுசெய்யப்பட்டவர்கள் கூட – குற்றச்சாட்டப்படாதோரைத் தாங்கள் விடுவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் நீதி அமைச்சர் சப்ரி .நாங்கள் தொடர்ந்து அதைச் செய்வோம், அடுத்த கூட்டத்துக்கு முன்னர் அந்தக் கைதிகளின் விடுதலையில் காத்திரமான முன்னேற்றம் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

நில அபகரிப்பு

அடுத்து நில அபகரிப்பு சம்பந்தப்பட்ட விடயம் கூறப்பட்டது.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் கூட்டமைப்பினர் விலாவாரியாக எடுத்துரைத்தனர். இராணுவம் ஒரு பக்கமாகவும், தொல்லியல் திணைக்களம் ஒரு பக்கமாகவும், வனவள திணைக்களம் ஒரு பக்கமாகவும் காணி அபகரிப்பு செய்கின்றார்கள், வயல் நிலங்கள், வணக்க தலங்கள், குடியிருப்புக்கள் எனப் பல இடங்களை மக்கள் நுழையத் தடைவிதிப்பதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியும், பிரதமரும், இப்படியான விடயத்தைத் தாம் அறிந்திருக்கவில்லை என்ற பாணியில் கருத்துத் தெரிவித்தனர்.

‘இராணுவத்தினர் காணி சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்குக் காணி?’ என ஜனாதிபதி ஆச்சரியமாகக் கேள்வி எழுப்பினார்.

வயல் நிலங்களைச் சுவீகரிப்பது, மக்கள் நுழையத் தடைவிதிப்பதெல்லாம் ஏற்க முடியாத நடைமுறைகள் என ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகலவிதமான காணி சுவீகரிப்பையும் நிறுத்த உத்தரவிடுமாறும், இது விடயமாகக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டமைப்பு கோரியது.

உடனடியாக, அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இராணுவத்தையோ, கடற்படையையோ, விமானப்படையையோ இனிக் காணி சுவீகரிப்பில் ஈடுபடக்கூடாது எனத் தாம் உத்தரவிட்டிருக்கின்றார் என்று கூறிய ஜனாதிபதி, அதை மீறி இனி எதுவும் நடக்காது என்றும் உறுதியளித்தார்.

எனினும், அத்தகைய அபகரிப்புகள் தொடர்கின்றன என விலாவாரியாக எடுத்துரைத்தனர் கூட்டமைப்பினர். அந்த விவரங்களைத் தாருங்கள் இனிமேல் அப்படி நடக்காமல் தாம் உறுதியாகப் பார்த்துக் கொள்வார் என்றார் ஜனாதிபதி.

எல்லை மீள் நிர்ணயம் செய்து, இனப்ரப்பலை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டதற்கு ஜனாதிபதி இணங்கினார். கூட்டமைப்பினருடன் பேசாமல் வடக்கு, கிழக்கில் அத்தகைய மாற்றங்கள் ஏதும் இனி செய்யப்பட மாட்டாது என்று ஜனாதிபதி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி சபை, தொல்லியல் திணக்களம் போன்றன காணிகளைக் கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளும் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், இனிமேல் அந்தத் தரப்புகள் கூட்டமைப்புடன் கலந்து பேசாமல் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க மாட்டா என்றும், அதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி சம்பந்தப்பட்டோருக்கு வழங்குவார் என்றும் உறுதி கூறப்பட்டது.

வயல்களில் வேலை செய்வோர் தொல்லியல் திணைக்களத்தால் தடுக்கப்படுகின்ற விடயம் உடனடியாக நிறுத்தப்படும். தங்களின் வாழ்வாதாரத்துக்காக நீண்ட காலம் பயிர்செய்வோரை யாரும் தடுக்க முடியாது, அதற்கான உத்தரவு உரியவர்களுக்கு வழங்கப்படும் என உறுதி கூறப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

தொடர்ந்து காணாமல்போனோர் விவகாரம் ஆராயப்பட்டது. ஒரு இலட்சம் ரூபா வழங்கிய மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்களா என்று சம்பந்தன் சீறினார்.

வழங்குவது நட்டஈடு அல்ல, அது உடனடி இடைக்கால நிவாரணம்தான், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஒவ்வொருவர் குறித்தும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான உடனடி விசாரணைகள் தனித்தனியாக ஆரம்பிக்கப்படும். அடுத்த கூட்டத்துக்கு முன்னர் இதில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு தனியான நிதியம்

நான்காவது விடயமாக வடக்கு – கிழக்கு பொருளாதார மீட்சிக்காக ஒரு விசேட அபிவிருத்தி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதனைக் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசு முன்னெடுக்கும். அதன் மூலம் புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை தருவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை அரசு உருவாக்கும். கூட்டமைப்புடனான அடுத்த கூட்டத்திற்கு முன்னர் அந்த நிதியம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அரசமைப்பு உருவாக்கத்துக்காக ஜனாதிபதி நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கை அதன் மொழிபெயர்ப்போடு இரண்டு மாதங்களுக்குள் தயாரானதும் கூட்டமைப்பு – ஜனாதிபதி அடுத்த சுற்றுப் பேச்சு அதை அடிப்படையாக வைத்துத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கு முன்னர் மேற்படி நான்கு விடயங்களிலும் காத்திரமான நடவடிக்கை, கூட்டமைப்பைத் திருப்திப்படுத்தக் கூடிய விதத்தில் முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழி அரசு தரப்பில் வழங்கப்பட்டது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *