ஒரு தறுதலையின் ஒருதலை காதலால் ஓருயிர் பறிக்கப்பட்டு, சரியாக 17 ஆவது நாளில், அதேமாதிரியான காதல் விவகாரத்தால் மூன்று உயிர்கள், அநியாயமாக பறிக்கப்பட்டு, குடும்பத் தலைவி, குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும் சம்பவம், கண்களைக் கலங்கச் செய்துள்ளது.
ஒரு தறுதலையின் காதல், கோடரியால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது, இதில், உயர்தரத்தில் கற்றுக்கொண்டிருந்த பதுளை, உடுவரை நேப்பியர் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயதான தர்மராஜா நித்தியா எனும் மலர் கருக்கப்பட்டது. உடுநுவரவின் விளக்கும் அணைக்கப்பட்டுவிட்டது.
கண்டி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புரவத்த பிரதேசத்தில் மார்ச் 24ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில், மூன்று உயிர்கள் ஏதோவொரு திரவத்தால் பறிக்கப்பட்டன.
இதற்கும் காதல் விவகாரம்தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. சுமார் 12 வருடங்கள் காதலித்துள்ளனர். வயதை பார்க்குமிடத்து காதல் வயப்படுத்தலுக்கு பிந்திய காதல், முற்றிய காதல், கண்களை மூடச்செய்துவிட்டது என்பதுதான் வெட்கக்கேடான விடயமாகும். இதேபோன்ற சம்பவங்கள் நாட்டில் இடம்பெறாமல் இல்லை.
களனி கங்ககையிலிருந்து அண்மையில், மீட்கப்பட்ட 18 வயதான யுவதியும், காதல் விவகாரத்தால் கழுத்தறுத்துக்கொல்லப்பட்டார். அதன்பின்னரே, அவரின் சடலத்தை கங்கையில், அவரது காதலன் வீசி சென்றுள்ளார் என விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக, சிறிய குடிசைகளில் வாழ்வோர், மிகவும் நெருக்கமான அண்ணியோன்யமாகவும் இருப்பவர், ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருப்பர், அவ்வாறுதான், இந்தக் குடும்பமும் தகர கொட்டைகையில் தங்களுடைய வாழ்க்கைகளை கொண்டுநடத்திக்கொண்டிருக்கிறது.
காதலுக்கு கண் இல்லை என்பர், எனினும், தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், விட்டுவிலகி ஒதுங்கி, தமக்கென ஒரு வாழ்க்கையை அமைத்து சந்தோஷமாக வாழவேண்டும். வாழ்ந்துகாட்டவேண்டும். பிடிக்கவில்லை என்றதும் உயிரை பலியெடுக்கும் அளவுக்குச் செல்லக்கூடாது. “எவரது உயிரையும் யாரும் பலியெடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை”
இருவரிடையேனும் காதல் இருந்துள்ளது. இல்லையேல் காதலன் வீடுத்தேடி செல்லமுடியாது. அதேபோல், மனகசப்புகளும் இருந்துள்ளன. ஒவ்வொரு காதலிலும் ஏதோவொன்று கசக்கத்தான் செய்யும். 12 வருட காதலை, காதலி கைவிட்டுவிட்டுள்ளார். அதில் விரக்தியடைந்த காதலன், காதலியின் வீட்டுக்குச் சென்று அடிக்கடி தொந்தரவு கொடுத்துவந்துள்ளார்.
சம்பவதினமான வியாழக்கிழமை (24) காலை 7 மணியளவில், தனது காதலியின் வீட்டுக்கு சென்றிருந்த இளைஞன், திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் மறுத்துள்ளனர். வீட்டுக்குள்ளே வெளியிலிருந்து எவருக்கும் செல்ல முடியாத வகையில் கதவுகளை பூட்டியுள்ளார். பின்னர் ஒருவகையான திராவகத்தை வீசியுள்ளார். பெற்றோலையும் ஊற்றியுள்ளார். இதனை அவதானித்த தாய், மற்றுமொரு கதவுக்கு அருகில் சென்றுள்ளார்.
ஒரு அடி நகர்வதற்குள்ளே வீடு தீப்பற்றி எரிந்துவிட்டது. முழுமையாக பலகைகளால் சுற்றிலும் மறைக்கப்பட்டிருந்தமையால் தீப்பிழம்பாக எரிந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் செல்லமுடியவில்லை. எனினும், கூக்குரல் கேட்டு, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றவர்கள் காயமடைந்த பெண்ணைக் காப்பாற்றி, கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் அவர்தான் ராணி அம்மா.
அவர், வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம், காதல் விவகாரமே தீ வைக்கப்பட்டமைக்கு காரணமெனத் தெரிவித்துள்ளார். “மகளை காப்பாற்றுங்கள் மகளைக் காப்பாற்றுங்கள் உள்ளே அவள் இருக்கிறாள்” என அபாயக்குரல் எழுப்பியுள்ளார். எனினும், மூவரும் கருகிவிட்டனர்.
காதலனும், 30 வயதான ஈஸ்வரன் மேனகா (காதலி), யுவதியின் தந்தையான 71 வயதான ஈஸ்வரன் தேவன் ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், 65 வயதான ராணி அம்மா என்றழைக்கப்படும் தாய், எரிகாயங்களுடன் சிகிச்சைப்பெற்று வருகின்றனார்.
சந்தேகநபரான இளைஞன், கண்டியிலுள்ள நகைக்கடையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார். திருட்டு சம்பவம் தொடர்பில் 6 மாதங்களுக்கு முன்னர், சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையானவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எரிந்து கருகிய வீட்டுக்குள் இருந்த தகரப் பெட்டியொன்றில் 50 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இருந்ததாக தெரிவித்த பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
“ வீட்டில் தீபற்றிய போது ராணி அம்மா மாத்திரமே கூக்குரலிட்டுள்ளார். அவரைத் தவிர வேறு எவரும் சத்தமிட்டவில்லை. எனவே தந்தையும் மகளையும் மயக்கமடையச் செய்த பின்னரே தீயை வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
பல கோணங்களில் சந்தேகங்கள் வலுத்தாலும், கருகிய மூன்று உயிர்களையும், கருக்கிய காதலையும் மீண்டெழச் செய்யமுடியாது என்பது மட்டுமே உண்மை. அதனை வாழ்க்கையில் ஒரு பாடமாக கற்றுக்கொள்ளவேண்டும். இதனை காதலாக கருதமுடியாது. முற்றிய காதலாகும்.
Be First to Comment