ஜனாதிபதி தலைமையிலான அரச தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சில் “அரசு எதிர்கொண்டிருக்கும் சர்வதேச விசாரணை மற்றும் நீதி பொறிமுறையை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாக சில உறுதிமொழிகளை வழங்கி இருப்பது ஆபத்தானவையாக இருக்கின்றன.” என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ சாடியுள்ளது.
அத்துடன், புதிய அரசியல் யாப்புக்கான நிபுணர் குழுவின் பரிந்துரையுடன் ஏற்கனவே அரசியல் யாப்பிலுள்ள விடயங்களை பிணைப்பது என்பது எமது சமஷ்டி முறையிலான கோரிக்கையை இல்லது ஒழிப்பதாகவே முடியும். ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கின்ற, நாம் தீர்வாக ஏற்றுக்கொள்ளாத விடயங்களை, புதிய அரசியல் யாப்பில் எமது அரசியல் தீர்வாக திணிக்கும் சூழ்ச்சியாக அமைந்துவிடும் என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு. சுரேந்திரன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி – கூட்டமைப்புடனான பேச்சு தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு,
கடந்த காலங்களில் ராஜபக்ஷ அரசோடு நடத்திய பேச்சுக்களை தங்களுக்கு சார்பாக அவர்கள் கையாண்ட அனுபவங்களையும் சுட்டிக் காட்டியிருந்தோம். எமது தரப்பில் அரசாங்கத்தோடு பேசித்தான் தமிழர்களுக்கு தீர்வு காணவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நாங்கள் கலந்து கொள்ளும் பேச்சுக்களை தங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் முடக்கி விடக்கூடிய ஆபத்து இருப்பதிலும் அச்சம் கொண்டிருந்தோம். இருப்பினும் எமது அங்கத்துவ கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன.
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்னை இருப்பதை அரச தரப்பு ஏற்றுக் கொள்ளாத நிலையில் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு விடயமாக நாம் எதிர்பார்த்த கருத்துக்களையே அரசு தெரிவித்திருந்தது. அதை நிறைவேற்ற முடியாத நிலைமையில் அரசு இப்பொழுது இருப்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். இதற்கு பின்னராக நாம் முன்மொழிந்த முக்கிய நல்லிணக்க கோரிக்கைகள் உள்ளடங்கலாக சில விடயங்களை நிறைவேற்றுமாறு எமது அங்கத்துவ கட்சிகள் அரசை கோரியிருந்தனர். இதை அரசு கையாள முற்பட்டுள்ள முறையில் நாங்கள் மிகுந்த கவலையும் கரிசனையும் கொண்டுள்ளோம்.
அரசு எதிர்கொண்டிருக்கும் சர்வதேச விசாரணை மற்றும் நீதி பொறிமுறையை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாக சில உறுதிமொழிகளை வழங்கி இருப்பது ஆபத்தானவையாக இருக்கின்றன. நல்லிணக்க கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல கூறிக்கொண்டு எமது மக்களின் நீண்டகால முயற்சிக்கு பின்னர் தற்பொழுது ஐ. நாவில் முன்னெடுக்கப்படும் நீதிப் பொறிமுறையை அரசு தவிடு பொடியாக்க இடமளிக்க முடியாது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சம்பந்தமாக அரச தரப்பில் விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்திருப்பது சர்வதேச விசாரணையை நீர்த்துப்போக வைக்கும் செயலாகும்.
மனித உரிமைகள் மீறல்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு ஆதாரமாக இருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமாகும். இன்று சர்வதேச நீதி பொறிமுறைக்கு கொண்டு செல்வதற்கு ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஐ. நாவும் அதற்கான பலமான கோரிக்கைகளில் எமது தரப்பும் ஈடுபட்டு வருகிறோம். அப்படியான சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு ஆதாரங்களைத் திரட்டுவது சம்பந்தமாக அரசின் நல்லிணக்க வெளிப்பாடுதான் எம்மக்களுக்கு நலன் தரும் பிரதான அம்சமாகும். அதைவிடுத்து அதற்குத் தீர்வாக தாங்கள் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கிறோம் என்று அரசு உறுதி மொழி வழங்கியிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களுகான நீதியை இல்லாமல் ஆக்குகின்ற செயலாகும். அதற்கான சர்வதேச, ஐ. நா. மற்றும் எமது முயற்சிகளை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாகும். சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு முன் இலங்கை அரசை பாரப்படுத்த வேண்டும் என்று நாங்கள் பலமான கோரிக்கைகளை சர்வதேசத்திற்கு முன்வைத்து கொண்டு அரசின் உள்ளக விசாரணை என்ற பொறிக்குள் அகப்பட்டுக் கொள்ள முடியாது.
இரண்டாவதாக அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக நீதி அமைச்சரை கொண்ட குழு ஒன்றை அமைத்து கைதிகள் விடுதலை சம்பந்தமாக சட்ட விடயங்களை பரிசீலிப்பதாக அரசு உறுதிமொழி வழங்கியிருக்கிறது. இதே நீதி அமைச்சர் இந்நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்று ஊடகங்களிலும் பாராளுமன்றத்திலும் உரையாற்றி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இவ்விடயம் சட்டரீதியான முடிவை கடந்து அரசியல் ரீதியாக எட்டப்படும் முடிவே அவசியம். ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட அரசியல் கைதிகள் மாத்திரமல்ல ஆதாரமின்றி தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களும், அண்மையில் அரசியல் காரணங்களுக்காக , கைதுசெய்யப்பட்ட, நூற்றுக்கணக்கான குற்றங்கள் ஏதும் இழைக்காத குற்றங்கள் சாட்டப்படாமல் தடுத்து வைத்திருப்பவர்களையும் விடுதலை செய்ய முடியும்.
இந்தச் சூழ்நிலையில் விடுதலைக்கான நல்லிணக்க அறிவிப்பை மேற்கொள்ள அரசு தயாரா இல்லை. எமது தரப்பிலும் ஒருவரை நீதி அமைச்சரோடு இணைத்து தங்கள் தவறுக்கு எமது தரப்பையும் பங்காளிகள் ஆக்க முனைகிறார்கள்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என்பது நீதியின் அடிப்படையில் இதுவரை காலமும் முடியாத விடயமாகவே உள்ளது. பொது மன்னிப்பின் அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதே நல்லிணக்க நடவடிக்கையாக கருத முடியும். உதாரணமாக குற்றங்கள் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட அரசுக்கு தேவையான பலர் ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவிலையே விடுவிக்கப்பட்டதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மூன்றாவதாக காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு ஆகிவற்றை தடுத்து நிறுத்துதல் சம்பந்தமான கோரிக்கைக்கு அரசு நழுவல் போக்கில் பதில் அளித்துள்ளது. தங்களுக்கு அதைப்பற்றி தெரியாதென்றும் அப்படி ஏதும் நடந்தால் தற்காலிகமாக நிறுத்துவதாகவும் கூறியிருக்கிறார்கள். காணி அபகரிப்பு சம்பந்தமாக உரிய ஆதாரங்கள் பல்வேறு தமிழர் தரப்பினராலும் திரட்டப்பட்டு இருந்த நிலையில் அவை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கவில்லை என்பதை அவதானிக்கிறோம். பாதுகாப்பு அமைச்சினால் மாத்திரமல்லாமல் பல்வேறு திணைக்களங்கள், பொறிமுறைகளின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. பிரதான பங்காற்றும் தொல்லியல் ஆணைக்குழுவை உடனடியாகக் கலைப்பது என்பது உட்பட பல முக்கிய விடயங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இதுவரைகாலமும் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விடுவிப்பு சம்பந்தமாக எதுவும் பிரஸ்தாபிக்க பட்டிருக்கவில்லை.
கடந்த செப்டெம்பர் மாதம் 2021 ஐநா உயர்ஸ்தானிகருக்கு 5 தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்து அனுப்பிய கடிதத்தில் மிகக்குறுகிய 6 மாத காலத்துக்குள் நடைபெற்ற காணி அபகரிப்புக்களை ஆதாரத்தோடு சமர்ப்பித்து இருந்தோம். அவை இவ்வருட பெப்ரவரி மாத ஐ. நா. உயர்ஸ்தானிகரால் பிரதான விடயமாக அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது. காணி அபகரிப்பு சம்பந்தமாக கடந்த மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதிகள் தமது அக்கறையை தெரிவித்திருந்தார்கள். சர்வதேசத்தின் அவதானத்திற்கு கொண்டுவரப்பட்டு இருக்கும் இவ்விடயங்களை அரசு திசைதிருப்புவதாக அச்சம் கொள்கிறோம். அதிகாரப் பகிர்வின் மூலமே இதை தடுத்து நிறுத்த முடியும் என்பதில் நாம் மாறாத நிலைப்பாட்டில் உள்ளோம்.
நான்காவதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பொது நிதியத்தை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக புலம்பெயர் உறவுகளின் நிதியை பெற்றுக் கொள்ளும் வழிமுறை என்பது ஆட்டைப் பிடித்து ஓநாயின் குகைக்குள் விட்ட கதையாகி விடும். மத்திய அரசு தனது எண்ணப்படியே அந்த நிதியை பயன்படுத்தும். அதிகாரப் பகிர்வு ஊடாக ஏற்படுத்தப்படும் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படும் பொது நிதியம் தான் தமிழ் தேசியத்திற்கான தற்சார்பு பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதற்கு உதவும். மேலும் அதிகாரப் பகிர்வை கோரி நிற்கும் தமிழினம் அபிவிருத்திக்கான நிதியத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பது எமது கோரிக்கைக்கு நேர் எதிரானது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே எமது நிலைப்பாடாகும். ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கும் விடயங்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தும் நல்லிணக்க கோரிக்கையை அரசாங்கத் தரப்பு புதிதாக வெளிவரவிருக்கும் அரசியல் யாப்பு நிபுணர் குழுவின் அறிக்கையுடன் பிணைப்பது ஆபத்தானதாகும்.
புதிய அரசியல் யாப்புக்கான நிபுணர் குழுவின் பரிந்துரையுடன் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை பிணைப்பது என்பது எமது சமஷ்டி முறையிலான கோரிக்கையை இல்லாதொழிப்பதாகவே அமையும். ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கின்ற, நாம் தீர்வாக ஏற்றுக்கொள்ளாத விடயங்களை, புதிய அரசியல் யாப்பில் எமது அரசியல் தீர்வாகத் திணிக்கும் சூழ்ச்சியாக அமைந்துவிடும்.
நிபுணர் குழுவின் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற பாராளுமன்ற பலத்துடனோ அல்லது மக்கள் ஆதரவுடனோ அரசாங்கம் இல்லை. இந்த நிலையில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை முற்றுமுழுதாக அரசாங்கம் நிறைவேற்றுவதுதான் தமிழ்மக்கள் எதிர்கொண்டிருக்கும், நாம் மேலே குறிப்பிட்ட, காணி மற்றும் அபிவிருத்தி விடயங்களில் ஓரளவேனும் நிவாரணமாக அமையும். இது தீர்வுக்கான அரசின் நல்லிணக்க நடவடிக்கையாக அமையவேண்டுமே தவிர தீர்வாக ஏற்க முடியாது.
இறுதியில் ஆக்கபூர்வமான பேச்சுக்கான நல்லிணக்க கோரிக்கைகளே இறுதியில் பேச்சுவார்த்தையாக மாறியிருக்கும் துர்ப்பாக்கிய சூழல் கவலையளிக்கிறது. இதனாலேயே நல்லிணக்க கோரிக்கையாக சில விடயங்களை அடையாளப்படுத்த படுத்தி, அவற்றை அரசாங்க தரப்பிற்கு அறிவித்து , அவை நிறைவேற்றப் பட்ட பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதே எமது இனம்சார் நலன்களைப் பேணும் என எமது அங்கத்துவ கட்சிகளை கோரியிருந்தோம்.
கடந்த காலங்களில், தாம் எதிர்கொள்ளும் சர்வதேச மற்றும் உள்ளக நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காக பேரினவாத அரசுகள் எம்மை பயன்படுத்தி வந்த வரலாறுகளையும் கருத்தில்கொண்டு, எமது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலும் சந்தர்ப்பங்களை சரியான முறையிலும் பக்குவமாகவும் எமது இனம் சார்ந்து கையாள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு -என்றுள்ளது.
Be First to Comment