ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்துவதற்காக வருகை தந்தமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
அத்துடன், பேச்சில் ஈடுபடும் இரு தரப்பினருக்கு இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டு இதயசுத்தியுடன் தொடரவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டமைப்பு – ஜனாதிபதி பேச்சு தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், தனிப்பட்ட முறையில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுகளின் ஊடாக இணக்கப்பாடுகளும் புரிதல்களும் ஏற்பட்டு விட்டுக்கொடுப்புக்களுடன் தீர்வுகள் எட்டப்படுவதே சிறந்தவொரு விடயம் என்ற நிலைப்பாட்டை நான் கொண்டிருக்கின்றேன்.
அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் பிரதிநிதித்துவப்படும் மக்களின் பிரச்னைகள் தொடர்பாக தீர்வுகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சை ஆரம்பித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சு மேசையில் அமர்ந்தமையானது வரவேற்கத்தக்க விடயமாகும். இந்தப் பேச்சானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதனை நோக்கமாக கொண்டு இரு தரப்பினருக்ம் இடையில் நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்பட்டு விட்டுக்கொடுப்புக்களுனும் தொடரப்பட வேண்டும்.
மேலும், முன்வைக்கப்படும் நிபந்தனைகள் நடைமுறைச் சாத்தியமானவையாகவும் தென்னிலங்கையில் உள்ள கடுப்போக்காளர்களை விடவும் முற்போக்கானவர்களை காயப்படுத்துவதாக அமையாத வண்ணமிருப்பது மிகவும் கரிசனைக்குரிய விடயமாகின்றது – என்றார்.
Be First to Comment