Press "Enter" to skip to content

வடக்கு செய்திகள் ஜனாதிபதியுடன் பேசும் எமது முடிவு சரியானதே – மாவை!

ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்வது தொடர்பில் பலரும் எம்மீது விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், நாம் பேச்சுக்கு செல்லாவிட்டால், தாங்கள் பலமுறை அழைத்தும் பேச்சுக்கு வரவில்லை என்றே சர்வதேசத்துக்கு சொல்வார்கள். அதனால், நாம் எடுத்த முடிவு சரியானதே – இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா.

தந்தை செல்வா நினைவு விருது வழங்கும் நிகழ்வு நேற்று மாலை பண்டத்தரிப்பு வை. எம். எச். ஏ. மண்டபத்தில் செல்வா நற்பணி மன்ற தலைவர் சி. மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

ஜனாதிபதியுடனான பேச்சில் நாம் நான்கு முக்கிய விடயங்களை வலியுறுத்தினோம். தந்தை செல்வா காலம் முதலே சமஷ்டி ஆட்சிமுறையை தமிழர்கள் வலியுறுத்தி வருவதை நினைவூட்டியதோடு, அதன் அவசியத்தையும் தமிழர் பிரச்னையை இதன்மூலமே தீர்க்க முடியும் என்று வலியுறுத்தினோம்.

13ஆவது திருத்தச் சட்டம் மூலம் காணி, பொலிஸ் அதிகாரம் தரப்பட வேண்டும் என்று அழுத்திக் கூறியுள்ளோம். இந்த விடயம் குறித்து 3 மாதத்துக்குள் தீர்வு தருவார் என்று ஜனாதிபதி எமக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார். இந்தப் பேச்சின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்னை, போரால் பாதிக்கப்பட்டவர்களின் சிக்கல்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் கூறியிருக்கிறோம்.

எமது பிரச்னைகள் தீர வேண்டுமானால் நாம் அரசாங்கத்துடன் பேச வேண்டும். நாம் பேசுவதற்கு சென்றதை பலரும் விமர்சித்தார்கள். ஆனால், நாம் பேச்சுக்கு செல்லவில்லை என்றால் அரசாங்கம் சர்வதேசத்துக்கு கூறும், “நாம் பலமுறை அழைத்தும் பேச்சுக்கு அவர்கள் வரவில்லை”, என்று. நாம் அரசாங்கத்துடன் பேசுவதற்கு எடுத்த முடிவு சரியானது. பேச்சுக்களில் நாம் தொடர்ந்து பங்கேற்போம் – என்றார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *