இந்திய அரசாங்கத்திடம் மேலும் 100 கோடி டொலர்களை கடனாகக் கோரியுள்ளது இலங்கை அரசாங்கம். அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காகவே இதனைக் கோரியுள்ளதாக ‘ரொய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரிசி, கோதுமை மா, தானிய வகைகள், சீனி மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இலங்கையின் புதிய கடன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவினால் ஏற்கனவே 100 கோடி டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் புதுடில்லிக்கு சென்ற நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச அந்தக் கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார்.
இதனைத் தவிர, இந்தியா இவ்வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக 50 கோடி டொலர் கடன் வசதி மற்றும் நாணயப்பரிமாற்ற வசதியின் கீழ் 40 கோடி டொலர் கடனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Be First to Comment