Press "Enter" to skip to content

கூட்டமைப்பை விட்டு ரெலோ வெளியேறினால் சந்தோசம் – சுமந்திரன் எம். பி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமாக இருக்கும். எமது கட்சியில் பலருக்கு நீண்டகால எதிர்பார்ப்பே இவர்கள் எப்போது போவார்கள் என்பதே என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நிகழ்வின் பின்னர், தமிழ் அரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர் ஒருவர், “கடந்த காலங்களில் ஈ. பி. ஆர். எல். எவ். கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு தமிழ் அரசுக் கட்சியை விமர்சித்து பின்னர் வெளியேறியது. அதேபோன்றதான நிலையில் தற்போது ரெலோ காணப்படுகின்றது. எனவே ரெலோவும் வெளியேறிவிடும் என்ற அச்சம் உங்களுக்கு உள்ளதா?, எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அவர்,

“ஏன் அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்று அச்சமாக இருக்க வேண்டும். அது சந்தோசமாகவும் இருக்கலாம்தானே. எமது கட்சியில் பலருக்கு நீண்டகால எதிர்பார்ப்பு இவர்கள் எப்போது போவார்கள் என்பது. எனினும், நாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்கக்கூடாது. எல்லோரும் சேர்ந்து இயங்குவது எமது மக்களுக்கு பலமான விடயம் என்பதனால் நாங்கள் எல்லோருடனும் சேர்ந்து பயணிக்கின்றோம்.

இன்று அரசாங்கத்துடன் தமிழ் தரப்பு பேச்சு நடத்தும் சூழ்நிலையில் ரெலோ மட்டுமல்ல வெளியில் உள்ள ஈ. பி. ஆர். எல். எவ். விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியாகட்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகட்டும் எல்லோரும் இதற்கு இணங்கி ஒன்றாக சேர்ந்து நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு முன்வைக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கோரிக்கை. இதனை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் என்ற வகையிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் என்றவகையிலும் இந்த அழைப்பை விடுக்கின்றேன்.

நாங்கள் ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் இல்லை. காட்டிக்கொடுக்கவும் இல்லை. ஆயுதப்போராட்டத்தை நேரடியாகவே காட்டிக்கொடுத்தவர்கள் பலர் நேரடியாகவே கொலை செய்தவர்கள் இன்று தாங்கள்தான் விடுதலைப் புலிகளின் பிரதான ஆதரவாளர்கள்போல் காட்டிக்கொண்டு திரிகின்றனர். அதில் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.

எனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்பது ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான கூற்று அல்ல. எனக்கு நம்பிக்கை இல்லை என்பதேதான். ஆனால், அந்த ஆயுதப் போராட்டம் நடந்த காலத்திலேயே அதனை முன்னின்று நடத்தியவர்களை காட்டிக்கொடுத்து ஆயுதத்தை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக திருப்பாமல் தங்களுடைய சொந்த போராளிகளுக்கு எதிராக சகோதர இயக்கங்களுக்கு எதிராக திருப்பியவர்கள் இன்று தாம் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இயங்கியவர்களைபோல பொய்யாக வேடம் போட்டு திரிகின்றனர். இதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அண்மையில் எங்களோடு பேச்சுக்கு வரமாட்டோம் என பகிஷ்கரித்த இயக்கத்தின் தலைவர் சொல்லியிருந்தார் சிறீசபாரத்தினமும் பிரபாகரனும் இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார்களோ அதனையே தாம் செய்தோம் என்று. பிரபாகரனும் சிறீசபாரத்தினமும் ஒன்றாக பயணித்தவர்கள் போல கூறியிருந்தார். ஆனால், தந்தை செல்வா இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பாரோ அதனையே நாம் செய்தோம் – என்றார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *