கடந்த இரண்டு வருடங்களில் நாம் ஆரம்பித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து இவ்வருட இறுதிக்குள் இலங்கை முழுவதும் 4040 கிராமிய குளங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொரகஹகந்த நீர்த்தேக்கம் என்பது கௌரவ பிரதமரின் மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டிருந்த ஒரு திட்டமாகும். அந்தத் திட்டம், நான் நீர்ப்பாசன அமைச்சராக இருந்தபோது, நீர்ப்பாசனத் துறையைச் சேர்ந்த ஏராளமான பொறியாளர்களை அந்தப் பகுதிக்கு வரவழைத்து எல்லாவற்றையும் ஆய்வு செய்து, அதற்கான பணிகளை ஆரம்பித்தது எனக்கு நினைவிருக்கிறது.
2015 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை கையளிக்கும் போது, சுமார் 40 வீதமான அணைக்கட்டுக்கான பணிகள் நிறைவடைந்திருந்தன. தற்போது அப்பணி நிறைவடைந்துள்ளது.
களுகங்கை திட்டத்தின் பணிகள் கடந்த அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இப்போது வடக்கே, வட மத்தியப் பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான பணிகளை 2020-ல் தொடங்க எமக்கு பணிக்கப்பட்டிருந்தது.
2021 ஜனாதிபதியின் தலைமையின் கீழ் வட மத்திய பிரதான கால்வாயின் வேலைகளை ஆரம்பித்தோம். 94 கிமீ நீளமுள்ள பெரிய கால்வாய். இந்த கால்வாய் ஹுருலு கால்வாய்க்கு நீரை கொண்டு செல்வதுடன் அநுராதபுரத்தில் உள்ள நுவர வௌ உட்பட சுமார் 2000 நீர்த்தேக்கங்களுக்கு நீரை வழங்குகிறது. அதேநேரம் வடக்கு மற்றும் திருகோணமலை பகுதிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
பிரதமர் ஈரானுக்கு விஜயம் செய்த போது, அதன் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை நாங்கள் பெற்றுக் கொண்டோம். இதன் பணிகள் நவம்பர் 2015க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஊவா கீழ் பகுதிக்கு நீரைக் கொண்டு செல்வதன் மூலம் 120 மெகாவொட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று வரை அதை செய்ய முடியவில்லை. 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் மே மாதத்திற்குள் உமா ஓயா திட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 120 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
நாம் திட்டமிடுவதைத் தொடர முடிந்தால் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் வராது. அரசாங்கங்கள் மாறுகின்றன. நீண்ட கால வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அடுத்து வரும் அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தும். அதனால் ஏற்படும் விளைவுகளையும், நஷ்டத்தையும் அடைவது நாடும் மக்களும்தான். இன்றும் அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த நெருக்கடிகள் அனைத்தையும் சமாளிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு இந்தப் பிரச்சினைகளை முறியடிப்பதற்கும் அவற்றை முறியடிக்க எம்முடன் கைகோர்க்குமாறும் மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment