நுகேகொடை – மிரிஹானையில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட பெண் ஒருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது காயமடைந்த உதவி காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 5 காவல்துறை உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், களுபோவில போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலகத்தை விளைவித்த தரப்பினர், ஒரு காவல்துறை பேருந்து, ஒரு காவல்துறை ஜீப் ரக வண்டி, உந்துருளிகள், முச்சக்கர வண்டி, இராணுவ பேருந்து என்பனவற்றை தீ வைத்து சேதமாக்கியதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, மேலும் சில தனியார் வாகனங்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று இரவு மிரிஹான – ஜூப்லி சந்தியில் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அந்த மக்கள் பேரணியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக வீடு அமைந்துள்ள மிரிஹான – பெங்கிரிவத்த பகுதிக்கு சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அமைதியின்மை ஏற்பட்டது. நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவற்துறையினர் மற்றும் கலகம் அடக்கும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது
Be First to Comment