யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் வாகரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் இறந்த பெண்ணின் தமக்கையாரின் கணவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,
வாகரை – பனிச்சங்கேணியில் யோகராசா திரிஷா (வயது 18) என்பவர் கடந்த மார்ச் 29ஆம் திகதி சடலமாக படுக்கையிலிருந்து மீட்கப்பட்டார். அவரின் வாயிலிருந்து இரத்தம் கசிந்த நிலையில் மீட்கப்பட்ட அவரின் உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் தாய், தந்தை பிரிந்து வாழும் நிலையில் அவரின் தாயார் பணி நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில், அந்த யுவதி தனது இரண்டாவது தமக்கையுடன் இருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 28ஆம் திகதி இரவு 7 மணியளவில் உயிரிழந்த பெண்ணின் சகோதரி மூத்த சகோதரியின் வீட்டுக்கு கணவருடன் சென்றுள்ளார். அவரை அவர் பட்டா வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் கணவர் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதாகக் கூறிவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் படித்துக் கொண்டிருந்த யுவதியும் தானும் மூத்த தமக்கையின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அவரை அழைத்துச் சென்ற அவர், சில நிமிடஙகளில் அவரை சடலமாக கொண்டுவந்துள்ளார். இரத்தக்றை படிந்த ஆடைகளை மாற்றிவிட்டு கட்டிலில் அவர் நித்திரையிலிருப்பதுபோல் ஏற்பாடு செய்துள்ளார். பின்னர் அந்த ஆடைகளையும் வீட்டிலிருந்த சி. சி. ரீ. வி. கமெராவின் வன்தட்டையும் கழற்றி மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் மனைவியை மீண்டும் அழைத்து வந்துள்ளார். மனைவியிடம் சகோதரி நித்திரையாக இருக்கிறார் எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டு இருவரும் நித்திரைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காலையில் தமக்கையார் சகோதரியை எழுப்பியபோதே யுவதி உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. அவரின் வாயிலிருந்தும் இரத்தம் கசிந்திருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனையில் யுவதி முதுகு மற்றும் தலைப் பகுதியில் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பொலிஸாரின் விசாரணையில் ஒளித்து வைக்கப்பட்ட பெண்ணின் உடைகளும், சி.சி.ரீ.வி. வன்தட்டும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment