ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைதியான போராட்டங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையை ஏற்படுத்தாத தலைவர் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மிகவும் ஜனநாயகமான தலைவர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைதியான போராட்டங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையை ஏற்படுத்தாத தலைவர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை உள்ளது. இங்கு அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
அமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வன்முறை கலந்து இருந்ததாலே அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சரவை அமைச்சர்கள் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் அமைதியான போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
ஆனால் வன்முறைகளை அனுமதிக்க முடியாது. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். மேலும், பொதுச் சொத்துக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அது அரசின் கடமை. ஜனாதிபதியிடம் நாம் முன்வைத்த கோரிக்கை அது. அவர் எப்போதும் ஜனநாயகத்தைப் பற்றியே பேசினார். காலி முகத்திடலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு தனது அலுவலகத்திற்கு செல்ல அவர் அனுமதித்தார்.
இரண்டாவது முறையாக அவரின் வீட்டுக்கு சென்று தாங்கள் அமைதியை விரும்பவில்லை, வன்முறையை விரும்புகிறோம் என்ற செய்தியை தெரிவித்திருக்கிறார்கள். இந்த போராட்டம் சில சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
வெளிப்படையாக ஜனாதிபதி கொல்லப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சேனல்களில் வரும் காட்சிகளைப் பார்த்தால் ஜனாதிபதியே கொல்லுங்கள் என்று கூக்குரலிடுவதைக் காணலாம். வழக்கம் போல் அவர்களை வட்டமிட்டு காட்டுமாறு ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் ஒரு போதும் வன்முறைக்கு அடிபணிய மாட்டோம். அதுதான் யதார்த்தம். ஆனால் நாங்களும் மக்களை அமைதியான போராட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நாங்களும் காலிமுகத்திடலுக்கு வந்தோம். அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தினோம். ஒரு கல்லையாவது அடித்தோமா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.
Be First to Comment