சீனாவில் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மக்களிடையே தீவிர பரவலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மார்ச்சில் 50 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு தொற்று பதிவானது.
அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரின் பெரும்பாலான பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா பரிசோதனை தொடங்கி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்பதற்காக சோதனை சாவடிகளில் பொருட்கள் கொண்டுவந்து டெலிவரி செய்யப்படும்.
மேலும், அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியம் அல்லாத அனைத்து வர்த்தகங்களும் மூடப்படும். அத்துடன் பொது போக்குவரத்தும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சீன அரசின் பூஜ்ஜிய கொரோனா கொள்கையின்படி, இத்தகைய கடும் கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிகமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி ஊக்குவித்துள்ளார். இதனையடுத்து உள்ளூர் அதிகாரிகள் மிகத்தீவிரமான கட்டுப்பாட்டு நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றனர்.
ஒருவேளை, கொரோனா பரவல் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகளுக்கு தான் தண்டனை அளிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
வீடுகளில் முடங்கி கிடக்கும் ஷாங்காய் நகரவாசிகள், பொழுதுபோக்கிற்காக தங்களுடைய வீடுகளின் பால்கனி பகுதிகளில் நின்றபடி பாட்டு பாடி கொண்டு இருக்கின்றனர். உணவு தட்டுப்பாட்டுக்கு எதிராக கூச்சலிட்டு கொண்டும் இருந்தனர்.
இந்த நிலையில், டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் வானில் பறந்து வந்து மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டன. அதனை கவனித்த அவர்கள் வீடியோவாக எடுத்து தங்களது நாட்டின் வெய்போ என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதன்பின் அதில் இருந்து சில சீன பத்திரிகையாளர்கள் வீடியோவை எடுத்து, டுவிட்டரில் வெளியிட்டு உள்ளனர்.
அந்த பதிவில், ஷாங்காய் நகர மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. உங்களது ஆத்ம விருப்பங்களை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. ஜன்னல்களை திறக்கவோ அல்லது பாட்டு பாடவோ செய்யாதீர்கள் என அதில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
இதேபோன்று மற்றொரு வீடியோவில், ஷாங்காய் நகர தெருக்களில் சுகாதார பணியாளர்கள் ஒலிபெருக்கிகளை வைத்து கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இன்றிரவு முதல், தம்பதிகள் தனித்தனியாக படுக்க வேண்டும். முத்தமிட கூடாது. கட்டிப்பிடித்தலுக்கும் அனுமதி இல்லை. தனியாகவே சாப்பிடுங்கள். உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி என அந்த பகுதிவாழ் மக்களிடம் கூறியபடி செல்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் 4 கால்களை கொண்ட ரோபோக்கள் ஷாங்காய் தெருக்களின் வழியே ரோந்து சென்று சுகாதார அறிவிப்புகளை வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தன.
ஷாங்காய் நகர மக்களிடையே உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வதில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இதனை ஒத்து கொண்டுள்ள நகர நிர்வாகம் நிலைமையை மேம்படுத்துவோம் என உறுதி மேற்கொண்டுள்ளது.
Be First to Comment