Press "Enter" to skip to content

நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயக்கூடாது

எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயவேண்டாம் எனவும், ராஜபக்சேக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு ஆளும் தரப்பின் பிரதம கொறோடா உட்பட ஆளும் தரப்பினர்கள் செயற்படுகிறார்கள். கோ ஹோம் கோடா என்பதை 225 உறுப்பினர்களும் செல்ல வேண்டும் என மாற்றிவிடுவது இலகுவானது.

நாடாளுமன்றம் ஒழுங்கு முறைக்கமைய செயற்படுவதில்லை. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு காண்பிக்கும் வகையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தவறான தலைமுறையினரிடம் மோதியுள்ளீர்கள் என குறிப்பிட்டு இளம் தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுப்பிடுகிறார்கள்.

நாடாளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தி எமக்கும் உண்டு. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள், மோசடியாளர்கள், கொலைகாரர்கள், கடத்தல்காரர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டு அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள்.

225 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் திருடர்களாகவும், மோசடியாளர்களாகவும் இருக்கும் போது நாட்டு மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது சாதாரணமானது.

ஜனாதிபதி கோட்டாபா ராஜபக்ஷவையும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்பி நாட்டு மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்ற முறைமை பலப்படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக நாடாளுமன்ற அதிகாரத்தை முழுமையாக இல்லாதொழித்து விட்டு இன்று 42 பேர் சுயாதீனமாக செயற்படுகிறார்களாம்.

நாடாளுமன்ற அதிகாரத்தை முழுமையாக ஜனாதிபதிக்கு வழங்கி விட்டு இன்று சிறுபிள்ளை போல் இங்கு வந்து அழுகிறார்கள். பிரச்சினையை தீவிரப்படுத்தி கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறது.

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் போது தற்போதைய பிரச்சினைக்கு நாடாளுமன்ற மட்டத்தில் ஏதாவது தீர்வு கிடைக்கப்பெறும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்கு முறைக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னெடுக்கப்படுகிறது. நாடாளுமன்றமும் வேண்டாம் என மக்கள் கருதும் நிலைப்பாட்டை தோற்றுவிக்கவே ஆளும் தரப்பு முயற்சிக்கிறது.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஆளும் தரப்பினருக்கு சார்பானவர்கள். மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக மாத்திரம் போராடவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள் என்பதை காண்பிக்கவே ஆளும் தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

சித்திரை புத்தாண்டு விடுமுறை காலத்தில் மக்கள் சோர்வடைந்து போராட்டங்களை மறந்து வழமையான சூழ்நிலைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் கருதுகிறது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கிடைப்பதால் நெருக்கடி சற்று தணியும் ஆனால் அது நிரந்தர தீர்வாக அமையாது. மேல்மாகாண மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

கிராமத்தில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு சோர்வடைந்து விட்டார்கள். இல்லாவிடின் பேரூந்துகளில் வந்து கொழும்பை முற்றுகையிடுவார்கள். களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்கள் போராட்டத்தை கைவிட கூடாது.

மக்கள் தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள், எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஒன்றினைந்தால் ஆளும் தரப்பினர் எவரும் வீடு செல்ல முடியாது. வீதியில் நின்று போராட்டத்தில் ஈடுப்படும் தாய் அடிப்படைவாதியா, மேல்மாகாண மக்கள் போராட்டத்தை கைவிட கூடாது.

போராடத்திற்கு தீர்வு காணாமல் அதனை முன்னெடுத்து செல்லவும் அல்லது நாட்டில் பிரச்சினையை தீவிரப்படுத்தி இராணுவ ஆட்சியை முன்னெடுப்பது ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஜனாதிபதி, பிரதமர் வீடுகளில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும். எத்தனை இலட்ச மக்களை விரட்டியடிக்க முடியும்.

அமைச்சு பதவிகளை துறந்து விட்டதாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் தொடர்ந்து அரச வாகனங்களை பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள்.

பிள்ளையான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் வாகனத்தில் வருகை தந்துள்ளார். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை நாட்டு மக்கள் போராட்டத்தை தொடர வேண்டும். இதுவே சிறந்த வாய்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *