யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உதயநகரைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பெண் கொடுத்த கடனை மீளக் கேட்கச் சென்றபோது, அந்த வீட்டில் இருந்த கணவனும், மனைவியும் பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதி முதல் இந்தப் பெண் காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ், அந்தப் பெண் கடைசியாகச் சென்ற வீட்டில் விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அந்த வீட்டு வளாகத்தில் பெண் புதைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நீதிமன்ற அனுமதி பெற்று அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. பணக் கொடுக்கல் வாங்கல் காரணமாகவே இந்தக் கொலை நடத்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்கள் கிடைக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Be First to Comment