மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ராஜபுத்திரன் சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் வகையிலும் நாடாளுமன்ற ஒழுக்கக்கோவையை அவமதித்தும் செயற்பட்டமைக்காக அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தனவிடம் எஸ்.எம்.எம். முஷாரப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் முஷாரப் எம் பி தெரிவிக்கையில் ,
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ராஜபுத்திரன் சாணக்கியன் நாடாளுமன்றத்தின் தலைமைதாங்கும் உறுப்பினர்களுள் ஒருவர். இவர் நாடாளுமன்றத்தில் ஏனைய உறுப்பினர்களினது சிறப்புரிமையை மீறும் வகையிலும், நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரித்தான ஒழுக்கக்கோவையினை அவமதிக்கும் வகையிலும் செயற்பட்டமையானது இந்த உயரிய சபையினை கலங்கப் படுத்துவதாக அமைகின்றது.
கடந்த 5ஆம் திகதி நான் நாடாளுமன்றத்தில் உரையாடிக் கொண்டிருந்தபோது என்னுடைய பேச்சுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் என்னிடம் 5,000 ரூபாய் பணத்தாளைக் காட்டி நான் பண ரீதியான பலன்களை தற்போதைய அரசாங்கத்திடம் பெற்றிருப்பதாக காட்ட முனைந்து எனது நற்பெயரை களங்கப்படுத்தியிருக்கிறார்.
பொருளாதார பிரச்சினை காரணமாக நாடு கொந்தளிப்பான நிலையில் காணப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர்களது கருத்துக்களை கேட்டறிந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக அன்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டிருந்தது. நேரலைபரப்பு செய்யப்படுகின்ற நாடாளுமன்ற அமர்வுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மில்லியன் கணக்கானவர்களின் பார்வைக்கு எட்டுகின்றது.
நாடாளுமன்ற ஒழுக்கக்கோவையினை மதிக்காத இவரின் ஒழுக்கமற்ற செயற்பாடுகள் ஒளிபரப்பப்படுவது நாடாளுமன்றம் மீதான நன்மதிப்பை சிதைப்பதாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் இதற்கு முன்னரும் பல சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை மிருகங்கள் என்று அருவருப்பான வார்த்தைகளால் அழைத்தும் இருக்கிறார்.
இவரின் அண்மைய அநாகரீகமானது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் என்னை அவமானப்படுத்துவதாகவும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பததாகவும் இருந்தது. அவ்வப்போது நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரம் வழங்கப்பட்ட உறுப்பினர் தான் நாடாளுமன்ற ஒழுக்கக்கோவையை மதிக்காத ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை நிரூபித்துள்ளார்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையினை நிலைநாட்டுவதற்கு கடப்பாடு உடைய தலைமைதாங்கும் உறுப்பினரான இவரது செயல் அநாகரீகமானது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற நிலையியற் கட்டளையினை தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போதும் உரையாடாமல் இருக்கின்றபோதும் முழுமையாக மீறுகின்றமை பல தடவைகள் அவதானிக்கப்பட்டுள்ளது.
சபையில் இவ்வாறான இழிசெயல்களை காண்பிப்பவர் எவ்வாறு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களினது உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் பாதுகாப்பார் என்பது கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இவர் நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளின் பிரிவு 92 (1) மீறியுள்ளார் என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒழுக்கக் கோவையின் பகுதி VIII மற்றும் பிரிவுகளான 30, 31, 32 என்பனவற்றையும் மீறியுள்ளார்.
ஆதலால் மேற்படி உறுப்புரைகளை மீறியுள்ள இவரை தலைமைதாங்கும் உறுப்பினர் என்ற பதவியிலிருந்து நீக்குமாறும், அவர் நடந்து கொண்ட விதம் குறித்து பாராளுமன்றத்தில் வெளிப்படையாக மன்னிப்புக் கோருமாறும், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தினால் அமைக்கப்படுகின்ற எந்தவொரு குழுவிலும் இவரை உறுப்பினராக நியமிப்பதற்கு தகுதியற்றவராக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.
Be First to Comment