நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, அரசமைப்புக்கு இணங்க ஜனாதிபதி விலக மாட்டார் என்றும் அவர் எதற்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.
மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்கள் என்றும் அதற்கிணங்க விருப்பமான அமைச்சரவையொன்றை ஸ்தாபித்துக்கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, ஜனாதிபதி நேற்று முன்தினம் நாடாளுமன்றுக்கு வருகைத் தந்ததாகவும் ஆனால் சபைக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது கூறிய இந்த வீர வசனத்தை, முடிந்தால் எரிபொருள் வரிசையில் நிற்கும் நபர்களிடம் சென்று கூறுமாறு தெரிவித்தார்.
எரிவாயு வரிசையில் நிற்போரிடம் சென்று கூறுங்கள் பார்க்கலாம் என்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்றும் அவ்வாறேதான் காணப்படுகின்றது என்றும் நிலைமை இன்னும் தீவிரமடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு, நாளைய தினம் கொழும்பை முற்றுகையிட மக்களே தீர்மானித்துள்ளார்கள் என்றும் இதனை அரசாங்கம் புரிந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Be First to Comment