இனப்பிரச்சினைக்கான தீர்வின் திறவுகோல் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் ஒற்றுமையிலேயே உண்டு. அரசுடனான தேசிய நல்லிணக்க உறவுவினாலேயே உண்டு என என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சகல மக்களினதும் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பற்றிய அறிக்கை தொடர்பாக அரசாங்கக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் தெரடர்ந்தும் கருத்து கூறுகையில் –
அத்தியாவசியப் பொருட்களுக்கு மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமையை உடனடியாக நாம் மாற்றியாக வேண்டும். பொது மக்களின் பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்து அரசியல் செய்வதென்பது எமது நாட்டில் இன்று நேற்று வந்த கலாசாரமல்ல என்பதால், நாம் விரைந்த மக்கள் நலக் கவனிப்புகளை முன்னெடுக்க வேண்டியிவர்களாக இருக்கின்றோம்.
மேலும், இத்தகைய பிரச்சினைகள் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல. இந்தியாவில் கடந்த 2 வாரங்களில் எரிபொருளின் விலைகள் 12 தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா இலங்கையைவிட மிக அதிகமான பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக அண்மையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியம் குறித்து பலருக்கும் பல்வேறு பார்வைகள் உண்டு, எமக்கென்றும் ஒரு பார்வை உண்டு. ஆனாலும், இது தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் தருணமல்ல. இன்றைய இடர்கால சூழலில் இருந்து இலங்கைதீவில் வாழும் சகல மக்களினதும் வாழ்வியல் மீட்சி குறித்து நடைமுறை சார்ந்து செயலாற்ற வேண்டிய தருணம். தேசிய பொருளாதார உற்பத்தி திட்டங்களை கடந்து போன ஆட்சிகளில் இருந்து சரிவர முன்னெடுத்திருந்தால் நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காது.
இலங்கை இந்திய ஒப்பந்தம், பிரேமதாசா புலிகள் பேச்சுவார்த்தை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்வுத் திட்டம், ரணில் புலிகள் ஒஸ்லோ ஒப்பந்தம், மஹிந்த ராஜபக்ச புலிகள் பேச்சுவார்த்தை, இத்தகைய அரிய வாய்ப்புகளை சக தமிழர் தரப்பு சரிவர கையாண்டிருந்தால், அழிவு யுத்தம் அன்றைக்கே முடிவிற்கு வந்திருக்கும். யுத்தத்திற்காக அரசு பட்ட கடன்களே இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த சபையில் ஒரு பக்க உண்மையை ஒப்புக்கொண்டுள்ளர். அந்த அழிவு யுத்தத்தை அவர்களே தமது சுயலாபங்களுக்காக தூண்டி விட்டார்கள். இன்று அவர்களே யுத்தத்திற்காக அரசு கடன்பட்ட காரணங்களே, இன்று சூழ்ந்திருப்பதாக கூச்சலிடுகின்றனர்.
அழிவு யுத்தத்தை சக தமிழ் தலைமைகள் தூண்டி விட்டதன் காரணங்கள் வேறொன்றும் இல்லை. புலிகளின் தலைமை அழிய வேண்டும், தமது அரசியல் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அழிவுகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த வேண்டும். இவைகளேயாகும்
இத்தகைய இரட்டை வேட நாடக நடிப்பில் இறங்கியிருப்போரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறேன். இன்று வீதியில் இறங்கியிருக்கும் ஒரு பகுதி சிங்கள மக்களிடம் ஆதரவு கேட்கிறீர்கள். அன்று அப்பாவி சிங்கள மக்களே தமிழ் தேசிய இனத்தின் பெயரால் குறி வைத்து கொல்லப்படும் போது அதற்கு எதிராக ஒரு கண்டனமாவாது தெரிவித்தீர்களா?.. இல்லை.
எமது நீதியான உரிமைப்போராட்ட காலம் தொட்டே நாம் சாதாரண சிங்கள மக்களையும் நேசித்து வந்தவர்கள். தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து வந்தது போல் அப்பாவி சிங்கள முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளையும் கண்டித்து வந்திருக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் அழிவுகளில் இருந்து தமிழ் மக்கள் தப்பித்து வந்த போது, அவர்களுக்கு நாங்கள் நிவாரணம் சேகரித்த போது, அள்ளி வழங்கியவர்கள் சிங்கள மக்கள். காலம் கடந்தாவது சிங்கள சகோதர மக்களிடம் நேசக்கரம் நீட்டும் நீசர்கள், எமது நீதியான உரிமைப் போராட்டத்தின் போதும் எம்மைப்போல் சிங்கள சகோதர மக்களிடம் நேசக்கரம் நீட்டியிருந்தால் தமிழ் பேசும் மக்கள் உரிமை பெற்று நிமிர்ந்தெழுந்திருப்பார்கள். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வின் திறவுகோல் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் ஒற்றுமையிலேயே உண்டு. அரசுடனான தேசிய நல்லிணக்க உறவுவினாலேயே உண்டு. சகல மக்களினதும் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கிறோம்.
தீராப்பிரச்சினையாக இருக்க வேண்டும் என்போருக்கும் தீர வேண்டிய பிரச்சினை என தீர்க்க வேண்டும் என்போருக்கும் இடையிலான முரண்பாடுகளே இன்று வன்முறை வடிவங்களாகவும் உருவாகியிருக்கின்றன.
கோட்டா வந்தால் வெள்ளை வான் ஓடும், முதலைக்கு வெட்டி போடுவார் என்று அச்சம் ஊட்டினார்கள்,. ஆனால் இன்று சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு பகுதி மக்கள் வீதியில் இறங்கி போராடும் ஜனநாயாக சுதந்திரம் உண்டென்ற நிலையையே காணமுடிகிறது.
இதுபோன்ற மக்கள் போராட்டங்கள் உலக நாடுகள் பலவற்றிலும் அசுர பலம் கொண்டு நசுக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் எமது இலங்கை தீவில் போராடுவதற்கான சுதந்திரம் உண்டென்பது மெய்ப்பிக்கப்படிருக்கிறது.
ஆகவே,.. அரசியல் கண்ணாடிகளை கழற்றி எறிந்து விட்டு நிஜக்கண்களால் காட்சிகளை பார்ப்போம் வாருங்கள்.
இன மத பேத கட்சி முரண்பாடுகளை தவிர்த்து விட்டு இடர் காலத்தை எதிர் கொண்டு எதிர்காலத்தை உருவாக்குவோம் வாருங்கள்.
தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களே ஒன்று பட்டு உழைப்போம் வாருங்கள். பொருதார நெருக்கடிகளில் இருந்து எமது தாய் மண்ணை மீட்டெடுப்போம். சகல மக்ககளும் சரி நிகர் சமன் என்ற நீதியை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment