அரசாங்கத்துக்கு எதிராக கையொப்பமிடப்படும் அவநம்பிக்கை பிரேரணை தொடர்பிலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு இன்று கூடி ஆராயவுள்ளது.
இதற்காக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தில், நாட்டின் தற்போது இடம்பெறும் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்தினால் இதுவரையில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும், 21ஆம் அரசியலமைப்புத் திருத்ததைக் கொண்டுவருவது குறித்தும் இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
Be First to Comment