Press "Enter" to skip to content

நிறைவேற்று அதிகார முறையை நீக்கவேண்டும் தமிழ்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள்

நிறைவேற்று அதிகார முறையை நீக்கக்கோரி தமிழ்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன
தமிழ் கட்சிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக விடுக்கும் ஊடக அறிக்கை
இலங்கைத் தீவு தனது வரலாற்றில் சந்தித்திராத பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் மக்களின் அன்றாட வாழ்வே ஸ்தம்பிதம் அடைந்து விடக் கூடிய ஆபத்தான நிலைமை காரணமாக மிகத் தீவிரமானதோர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சாதாரணப் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் தாமாகவே வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், சுகாதாரத்துறையினர் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் உள்ளடங்கலாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியான தீர்வு கோரிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையை ஜனாதிபதியும் அரசாங்கமும் மற்றும் சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு உரிய முறையில் கையாண்டு, அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடில் முழு நாடும் சீர்குலைந்து அராஜகம் தலைவிரித்து ஆடக் கூடிய மாபெரும் ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கின்றது.
தீ பரவுவதற்கு முன்னர் அதனைக் கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைப்பதற்கான நடவடிக்கைகளே இப்பொழுது உடனடியான தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இந்த நெருக்கடி நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அடிப்படையான காரணம் தனி ஒரு மனிதரின் கையில் நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையே என்பதில் பரந்துபட்டதும் தீவிரமானதுமான கருத்தோட்டம் எழுந்துள்ளது.
இன்று கொழுந்து விட்டெரியும் அமைதிக் குலைவுக்கு முடிவு கட்டவும், பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாகவும் விரைவாகவும் சகஜ நிலைக்கு கொண்டு வரவும் தேவைப்படுவதெல்லாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி, அதற்கு பதிலாக பாராளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்பிச் செல்வதே ஆகும்.
எனவேதான், இந்த முடிவு இலங்கையின் தேசிய மட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளப் படுவதற்கு ஏதுவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஏகோபித்து உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பகிரங்கமாக நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இன்றைய நிலையில் பொறுப்புணர்வு மிக்கவர்களாக சகல அரசியல் தரப்புக்களும் செயற்பட்டு, இந்த முடிவுக்கு வந்து, அதனை நடைமுறைப் படுத்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதே நாடு எதிர்நோக்கி நிற்கும் மிகப்பாரிய பிரச்சினையை தீர்ப்பதற்கு, சரியான திசையில் எடுத்து வைக்கப்படும் முதலாவது அடியாக இருக்கும் என்பதையும் அழுத்திக் கூற விரும்புகின்றோம்.
மாவை சேனாதிராஜா தலைவர் – இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி
(த.தே.கூ)
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் – பா. உ. தலைவர் – தமிழ் மக்கள் கூட்டணி
(த. ம. தே.கூ)
அ.அடைக்கலநாதன்- பா.உ தலைவர்- தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
(த.தே.கூ)
தர்மலிங்கம் சித்தர்த்தன் – பா.உ தலைவர்- ஜனநாயக மக்கள் விடுதலை
முன்னணி (த.தே.கூ)
க.பிரேமச்சந்திரன் தலைவர்- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணி ( த.ம.தே.கூ)
ந. சிறீகாந்தா தலைவர்- தமிழ் தேசியக் கட்சி (த.ம.தே.கூ)

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *