நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் 13-ந் தேதி(இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனிரூத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக் குத்து’ பாடல், விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் யூ-டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தன.
இந்த நிலையில் இன்று பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. இதனைக் காண திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் நள்ளிரவு முதல் குவிந்தனர். சில இடங்களில் டி.ஜே. பார்ட்டி வைத்து நடனமாடினர். பீஸ்ட் படம் திரையிடும் அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
அதே சமயம் திரையரங்குகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கான நேரம், இடம் ஆகியவை முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மோதல்கள், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Be First to Comment