மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டு கடற்றொழில் அமைச்சு தொடர்ந்தும் பயணிக்கும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
…………..
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை காணும் வகையில் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடரும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் வாழ்வாதார முன்னேற்றத்தினையும் இலக்காகக் கொண்ட திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், இன்று மீண்டும் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“நீண்ட காலமாக தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதி என்ற அடிப்படையிலும், எம்மால் வளர்க்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாகவும் கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், கடந்த இரண்டு வருடங்களாக நாடளாவிய ரீதியில் அடையாளப்படுத்தப்பட்ட கடற்றொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கும் புதிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
இதன்மூலம் கடற்றொழில் ஏற்றுமதிகளை விஸ்தரிப்பதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு அடிப்படை காரணிகளில் ஒன்றான அந்நியச் செலாவணிப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் மக்களுக்கு தேவையான போஷாக்கான கடலுணவுகள் தரமானதாகவும் நியாயமான விலையில் கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
அதேபோன்று எமது மக்களின் வாழ்வாதார எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்துவதே எமது திட்டமாக இருக்கின்றது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கடலட்டை வளர்ப்பு உட்பட்ட நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தி திட்டங்களை மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் விஸ்தரிப்பதுடன் பருத்தித்துறை, குருநகர், பேசாலை உட்பட பல இடங்களில் அமைக்கத் திட்டமிட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பது உட்பட்ட கடற்றொழில் அபிருத்திகளை மேற்கொண்டு நிலையான வாழ்வாதாரத்தை எமது மக்களுக்கு உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதேவேளை, தேசிய நல்லிணக்கம் காரணமாக தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருமைகின்றமையானது, எமது மக்கள் போதிய அரசியல் பலத்தினை எமக்கு வழங்குவார்களாயின், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்ற யதார்த்தமும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
Be First to Comment