உயிர்த்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். விரைவில் நீங்கள் எதிர்பார்த்த நீதி கிடைக்கும் என்று நான் பிரகடனப்படுத்துகிறேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவர் நேற்று விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தில் நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்து இன்றுடன் (நேற்றுடன்) மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த நேரத்தில் அரசாங்கத்தின் அலட்சியத்திற்காக தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை அப்பாவி கிறிஸ்தவ மக்கள் கொடுக்க வேண்டியிருந்தது.
எமது அரசாங்கம் பதவியேற்று ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையிலும் 269 பேரைக் கொன்று 400இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சாதாரண விஷயமல்ல. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சந்தேகநபர்களை நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்த பின்னரே அவர்களை தண்டிக்க முடியும். எனவே, இதுவரை கிடைக்கப்பெற்ற பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு விரைவில் நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த நீதி கிடைக்கும். இதற்காக நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறேன் என்பதை இன்று உறுதியளிக்கிறேன் – என்றுள்ளது.
Be First to Comment