உயிர்த்த ஞாயிறு தாக்குதல்ளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 60 பேரில் ஐவரை இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவித்தது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம். மிகுதி 55 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அம்பாந்தோட்டை, நுவரெலியா பகுதிகளில் பயிற்சி பெற்றனர் என்ற பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதிர, அவரின் கணவர் உள்ளிட்ட 69பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதானவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் 4 வெவ்வேறு இலக்கங்களைக் கொண்ட வழக்கு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதில், சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் ஆகியோரின் வழக்குகள் நீதிவான் நீதிமன்றில் இருந்து உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஐவர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து 60 பேர் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு எதிரான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று விசாரைணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, பலத்த பாதுகாப்புக்கு மத்தியல் 9 பேர் மன்றில் முற்படுத்தப்பட்டனர். இதில், ஐவர் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், இவர்கள் மாதாந்தம் 2ஆம், 3ஆம் ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும் என்று பணிக்கப்பட்டது.
இதேசமயம், ஏனைய 55 பேரையும் எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
Be First to Comment