Press "Enter" to skip to content

இலங்கையில் வாழ்ந்தால் பட்டினியால் இறந்து விடுவோம் – தமிழகம் சென்றுள்ள காக்கைதீவு ஆனைக்கோட்டை வாசிகள்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 09 மாத குழந்தை உள்ளிட்ட 15 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை தனுஷ்கோடியை அண்மித்த கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியை சென்றடைந்துள்ளனர்.

அது தொடர்பில் தகவல் அறிந்த  ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு  காவல்துறையினர் இவர்களை மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் போது , தாம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை படகில் ஏறியதாகவும் , இன்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை , இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதால், எப்படி வாங்கி சாப்பிட முடியும்? மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் காய்ச்சல் தலை வலிக்கு 4 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இலங்கையில் பட்னி சாவு ஏற்பட்டு, அனைவரும் உயிரிழக்க நேரிடும். எனவே உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *