சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க. பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கூறி அந்த பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த அதிபர் பாடசாலைக்கு வந்தது தொடக்கம் அவர் மாணவர்களது நலன்கள் மீது காட்டுகின்ற அக்கறை, மாணவர்கள் மீதான அணுகுமுறை மற்றும் பாடசாலையின் தலைமைத்துவம் என்பன சிறப்பாக காணப்படுவதால்
அவரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கூறி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். அதிபர் சுய விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெறுவதாக இருந்தால் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இது தொடர்பில் வலயக்கல்வி பணிமனைக்கு கடிதம் ஒன்று கையளிக்கப்போவதாகவும் 5 நாட்களுக்குள் தகுந்த பதில் தராவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த அதிபர் பாடசாலைக்கு வந்த பின்னர் வரலாற்றில் முதல் தடவையாக மாணவர் ஒருவர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment