யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கடல்பாசி செய்கையை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று இந்திய தனியார் முதலீட்டாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நடைபெற்றது.
இதன்போது இந்தியாவில் இருந்து கிடைக்கும் காலத்தின் தேவை உணர்ந்த ஒத்துழைப்புக்களை நினைவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“பொருளாதார சவால்களில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.
இந்நிலையில், இலங்கையில் காணப்படுகின்ற வளங்களை இனங்கண்டு நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி விருத்தி செய்வதன் மூலம் நிலையான பொருளாதார நன்மைகளை உருவாக்குவதற்கு இந்திய தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
அந்தவகையில், மண்டைதீவு உட்பட வடக்கு மாகாணத்தில் பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு கடல்பாசி செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் கடற்றொழில் அமைச்சு வழங்கும்” என்று தெரிவித்தார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர், நக்டா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Be First to Comment