அரசாங்கம் பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட காலவரையற்ற அமைதிப் போராட்டம் இன்று 22ஆவது நாளாக தொடர்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் இரவு பகல் பாராமல் பாரியளவிலான மக்கள் கலந்து கொண்டு போராட்டம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரும் அதேவேளையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மஹரகம, பிலியந்தலை, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சினிமா மற்றும் மேடை நடிகர்கள், இசைக்கலைஞர்கள், தொலைக்காட்சி, வானொலி தொகுப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பல கலைஞர்கள் பங்குபற்றும் எதிர்ப்பு பேரணி இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணியானது சுதந்திர சதுக்கத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி காலி முகத்திடலை நோக்கி சென்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.
நாடு முழுவதும் பாரிய போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ள பொது மக்களுக்கு நாட்டின் தலைவர்கள் பயப்படுவதாக பிரபல நடிகையான தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
குடும்பத்தை மையமாகக் கொண்ட அரசியல் மாதிரி நாட்டில் தோல்வியடைந்துள்ளது என அவர் வலியுறுத்தினார்.
எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கூறுவதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Be First to Comment