கோட்டா கோ ஹோம் என்று கூறுபவர்களால், நாளையதினம் கோட்டா பதவி விலகினால், வேறு ஒருவரை நியமிக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறேன் என தெரிவித்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அரசியல்வாதிகளின் இந்த கோரிக்கை வேறு. சஜித் பிரேமதாச போன்றவர்கள் இப்படியான கோஷத்தை எழுப்பினர், தேர்தலில் தோற்றனர். ஆனால், தற்போது கோட்டா பதவி விலகினால் வேறு ஒருவரை அரசியலமைப்புச் சட்டத்தின்படி நியமிக்க முடியாது. சஜித் போன்றோர் எப்போதும் கோட்டா கோ ஹோம் என்றே கூறி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதும் அதனை கூறுகின்றனர். இவர்கள் எரிவாயு பிரச்சினையையோ, எரிபொருள் பிரச்சினையையோ தீர்ப்பதற்காக இந்த கோரிக்கை விடுக்கவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக அவ்வாறு கூறுகின்றனர். சஜித் பிரேமதாச அல்லது இலங்கையில் உள்ள எவராவது கோட்டா பதவி விலகி, மறுநாளே அரச தலைவருக்கான தேர்தலை நடத்த முடியுமாயின் நானே கோட்டாபயவிடம் சென்று பதவி விலகுமாறு கோருவதுடன் நானும் பதவி விலகுவேன்
மக்கள் கோருவது போல் கோட்டா விலகி வீட்டுக்கு சென்றால், அவர்களால் மற்றுமொருவரை அரச தலைவராக தெரிவு செய்ய முடியாது. 225 பேரில் ஒருவரே அரச தலைவரவாக தெரிவு செய்யப்படுவார். இளைஞர்கள் கோரும் கோட்டா கோ ஹோம் கவிதை போல் கூறுவதற்கு அழகாக இருந்தாலும் அரச தலைவருக்கான தேர்தலை நடத்தி மற்றுமொருவரை தெரிவு செய்ய முடியாது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்போரே அரச தலைவர் பதவிக்காலத்திற்கு மற்றுமொருவரை தெரிவு செய்ய வேண்டும். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் அரச தலைவருக்கு வழங்கிய அதிகாரங்களை 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்னெடுத்து வருகின்றோம்
சஜித் பிரேமதாச அதற்கும் தடையாக இருக்கின்றார். இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைய எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, நிலையான அரசாங்கம் அமைக்க வேண்டும். தற்போது அரசாங்கம் ஸ்திரத்தன்மையுடன் இல்லை. ஆளும் கட்சியில் இருந்த சிலர் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும் சிலர் எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று விட்டனர்.
அரசாங்கம் ஸ்திரமாக இல்லை. அனைத்து கட்சிகளும் இணைந்த நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு பௌத்த மத தலைவர்கள் உட்பட அனைத்து மத தலைவர்களும் கோரியுள்ளனர். அப்படியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமாயின் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். அப்படியில்லை என்றால் தற்காலிக அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாமல் போகும் என அவர்கள் கூறுகின்றனர். மகிந்த ராஜபக்ச போரை வென்ற எமக்கு முன்னுதாரணமான தலைவர். எவரும் ஏற்காத சவாலை ஏற்று வெற்றி பெற்ற தலைவர்.
இன்று மகிந்தவை மைனா என்று சொல்கின்றனர். மைனா இல்லை என்றால், புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மைனாவே புலிகள் தோல்வியடைய காரணம். புலிகளை தோற்கடிக்க மகிந்த தலைமை வழங்கியதன் காரணமாக இன்று மைனா என்று கூறுபவர்களுக்கு அதனை கூற வாயை அசைக்க முடிகின்றது. போர் வெற்றிக்கு சரத் பொன்சேகா, படையினர் உதவினர் என்பது உண்மை. கோட்டாபய ராஜபக்ச அதற்கு உதவினார். அது மறந்து விட்டது. அது வேறு பிரச்சினை.
இப்படி நாட்டுக்கு சேவை செய்த மனிதனை அவமதிப்பு செய்வது தவறு. மகிந்த ராஜபக்ச என்பவர் மிகவும் கடினமான சவாலை பொறுப்பேற்று வெற்றிகொண்டவர் மட்டுமல்லாது எந்த நேரத்திலும் பதவியை கைவிட தயாராக இருக்கும் மனிதர்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து, அரசியலில் இருந்து விலகி அவர் வீட்டுக்கு சென்றார். வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவிடம் எவரும் செல்லவில்லை. தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சவிடம் சென்றே, மீண்டும் அரசியலுக்கு வாருங்கள், நாட்டை காப்பாற்றுங்கள் என கூறினர்.
மைத்திரிபால சிறிசேன சரியில்லை என்றனர். மகிந்த சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தார், அந்த கட்சியின் தலைவர் பதவியை மைத்திரிபாலவுக்கு வழங்கினார். மகிந்த நாட்டுக்காக பதவியை கைவிட்டவர். இதனால், அவருக்கு பிரதமர் பதவி பெரிய விடயமல்ல. கட்டாயம் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகுவார். ஆனால், இது எமது திட்டம் என்பதை அவருக்கு தெளிவாக எடுத்துக் கூற வேண்டும் எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment