வவுனியாவில் கைதானவர்களிடமிருந்து ஆவா குழுவின் ஆயதங்கள், பதாதைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்கப்பட்டதுடன், 16 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, ஓமந்தை, கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில் ஆவா குழு என பெயரிடப்பட்ட பதாதைகளுடன் 40 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்றிரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் குறித்த பகுதிக்கு சென்ற போது சிலர் தப்பியோடி இருந்ததுடன், 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் ‘ஆவா குழு வவுனியா’ என பெயரிட்ட பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், கூரிய ஆயுதங்களையும் தம்வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட 16 பேரும் ஓமந்தைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்கள், பதாதைகள், கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வவுனியா மருதங்குளம், அரசன்குளம், கோவில்குளம், கோழியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம், நெளுக்குளம், ஓமந்தை மற்றும் முல்லைத்தீவு, தலைமன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 18 தொடக்கம் 26 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் எனவும், இருவர் 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள், நால்வர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள், இருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
Be First to Comment