கடந்த ஆண்டுகளை விட 2021 இல் தற்கொலை செய்து கொண்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டில் 2632 ஆண்கள் மற்றும் 647 பெண்கள் என மொத்தமாக 3279 தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் அண்மைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தற்கொலைகளில் பெரும்பாலானவை குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டவையாகும். 2021ஆம் ஆண்டில் குடும்பத் தகராறு காரணமாக 614 பேரும், நாட்பட்ட நோய்களால் 430 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.
அத்துடன் 2021 ஆம் ஆண்டில் பொருளாதாரப் பிரச்சினைகளால் 174 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில் 154 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவர்.
2020 இல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3074 ஆக இருந்தது. 2019 இல் 3135 ஆகவும் 2018 இல் 3281 ஆகவும் காணப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நாட்டில் மொத்தமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3263 என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2016ல் 3025 ஆகவும் 2015 இல் 3,054 ஆகவும் 2014 இல் அந்த எண்ணிக்கை 3144 ஆகவும் இருந்தது.
2021 இல் 3279 தற்கொலைகளில் 2290 பேர் தூக்கிட்டும், பூச்சிக்கொல்லி அல்லது களை கொல்லி பயன்படுத்தியதால் 600 பேரும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான தற்கொலைகள் திருமணமானவர்களால் செய்யப்படுகின்றன. மேலும் 2021 ஆம் ஆண்டில் 2,391 தம்பதியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2021 இல் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் தொழில் வாய்ப்பற்றவர்கள் ஆவர். அவ்வாறு வேலைவாய்ப்பற்ற 1136 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் விவசாயத் துறையில் பணியாற்றும் 472 பேரும், உற்பத்திப் பணியில் ஈடுபட்டுள்ள 205 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment