எதிர்வரும் வாரம் முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியொன்று குறிப்பிடுகிறது.
இச்செய்தியின் உண்மைத்தன்மையை அறிய எமது செய்திப் பிரிவு இலங்கை மின்சார சபையிடம் வினவியது.
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி, குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இதுவரையில் இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இலங்கை மின்சார சபை இன்று (08) கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்தச் செய்தி தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவிடம் நாம் வினவியபோது, 10 மணித்தியால மின்வெட்டு தொடர்பில் தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய தரப்பினர் கூறும் கருத்துக்களுக்கு பதிலளிக்க தாம் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடுமையான டொலர் நெருக்கடியானது, நாட்டின் அத்தியாவசிய உணவு மற்றும் எரிசக்தி விநியோகத்தை சீர்குழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment