மட்டக்களப்பில் இரண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களின் இல்லங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட அரச ஆதரவு அரசியல்வாதிகளில் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் உட்பட பல பகுதிகளில் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதுடன் மாவட்டம் முற்றாக செயழிலந்த நிலையில் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் வெறிசோடிய நிலையில் காணப்படுவதுடன் பொதுப்போக்குவரத்துகளும் நடைபெறவில்லை.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளில் அலுவலகங்கள் இல்லங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் சோதனையிடப்படுவதுடன் ஊரடங்கு நடைமுறையினை மீறிவரும் வாகனங்கள் திருப்பியனுப்பப்படும் நிலையும் காணப்படுகின்றது.
இதேநேரம் மட்டக்களப்பு செங்கலடி சந்தியில் முன்னெடுக்கப்படும் கோட்டா கோம் கிராமத்தில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதை காணமுடிகின்றது.
குறித்த பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த போராட்டத்தில் பங்கெடுத்துவருவதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றனர்.
Be First to Comment