பிரதமர் பதவியை பொறுப்பேற்றல் மற்றும் புதிய அரசாங்கத்தை நிறுவுதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், புதிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தான் முதலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு தயாரில்லை எனவும் கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக சஜித் பிரேமதாச தனக்கு அறிவித்ததாக குறித்த கடிதத்தின் ஊடாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் தங்களால் பிரதமர் பதவி நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையில் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வாக ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் இந்நாட்டு பிரதமராக செயற்பட்ட மூத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க தீர்மானித்ததாக குறித்த கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய தேவையின் அடிப்படையில் தங்களது கட்சியின் சிலரை, நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் உள்ளீர்க்க உடன்பட்டால் தவறாது தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தனது கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்
Be First to Comment