Press "Enter" to skip to content

தியாகத் தாயொருவர் மகளை வளர்க்க ஆண் வேடமிட்ட பேச்சியம்மாள்…

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் 36 ஆண்டுகளுக்கு முன் பேச்சியம்மாள் என்பவருக்கு திருமணம் நடந்தது.  அப்போது அவருக்கு வயது 20.
15 நாட்களில் அவரது கணவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.  பேச்சியம்மாளுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.  வாழ்க்கையை நடத்தி செல்ல வேலைக்கு சென்றுள்ளார்.
ஆனால், ஆணாதிக்கம் நிறைந்த சூழலில் ஒரு பெண்ணாக வேலைக்கு செல்வதில் பல சங்கடங்கள் அவருக்கு ஏற்பட்டு உள்ளன.  இதுபற்றி அவர் கூறும்போது, எனது மகளை வளர்ப்பதற்காக கட்டுமான தொழில், ஓட்டல் மற்றும் தேநீர் கடைகளில் வேலைக்கு சேர்ந்தேன்.  பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல சோதனைகளை சந்தித்தேன் என வேதனையுடன் கூறுகிறார்.
இந்த துயரங்களுக்கு முடிவு கட்ட திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.  பின்னர் தனது தலைமுடியை ஆண்கள் போல் தோற்றமளிக்கும் வகையில், நன்றாக வெட்டி கொண்டார்.  சட்டையும், கைலியும் உடுத்தி கொண்டார்.  பேச்சியம்மாள் தனது பெயரையும் முத்து என மாற்றி கொண்டார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, 20 ஆண்டுகளாக காட்டுநாயக்கன்பட்டியிலேயே வசித்து வருகிறேன்.  எனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் எனது மகளுக்கு மட்டுமே நான் பெண் என்பது தெரியும் என கூறுகிறார்.
பேச்சியம்மாள் வேலை செய்யும் இடங்களில் எல்லாம் அவரை அண்ணாச்சி என்றே அழைத்துள்ளனர்.  அவர் கூறும்போது, எல்லா வகையான வேலைகளையும் நான் செய்துள்ளேன்.  பெயிண்டர், டீ மாஸ்டர், பரோட்டா மாஸ்டரில் இருந்து, 100 நாள் வேலை திட்டம் வரை வேலை செய்துள்ளேன்.
ஒவ்வொரு பைசாவையும் எனது மகளின் வாழ்க்கைக்காகவும், அவரது பாதுகாப்புக்காகவும் சேமித்தேன்.  இதன்பின்னர், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு என அனைத்து ஆவணங்களிலும் முத்து என்றே என்னை அடையாளப்படுத்தி கொண்டேன் என அவர் கூறியுள்ளார்.
அவரது மகள் சண்முகசுந்தரிக்கு திருமணம் முடிந்து விட்டது.  57 வயது கடந்த பின்னரும் தனது பழைய நிலைக்கு வர அவர் தயாராக இல்லை.  தனது இந்த அடையாளமே, தன்னுடைய மகளின் பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்தது.  அதனால், கடைசி வரை முத்துவாகவே இருந்து விட விரும்புகிறேன் என அவர் கூறுகிறார்.
பேச்சியம்மாளுக்கு சொந்தத்தில் வீடு எதுவும் இல்லை.  கணவனை இழந்ததற்கான சான்றிதழை பெறவும் அவரால் விண்ணப்பிக்க இயலாது.  எனினும் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான பணிவாய்ப்பு அட்டை ஒன்றை மட்டுமே தன்னுடன் அவர் வைத்துள்ளார்.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *