Press "Enter" to skip to content

மன்னிப்பின் மதிப்பை என் தந்தை எனக்கும், பிரியங்காவுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்’: ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாளை ஒட்டி அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “என் தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை செதுக்கியது. அவர் அன்பானவர். இரக்கமுள்ளனர்.

எனக்கும், பிரியங்காவுக்கும் ஓர் அற்புதமான தந்தை. எங்களுக்கு அவர் மன்னிப்பு, அனுதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். நான் அவரை இழந்து தவிக்கிறேன். அவருடன் கழித்த காலங்களை நினைவுகூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தமிழக காங்கிரஸார் வாயில் வெள்ளைத் துணி கட்டி அறப்போர் நடத்தினர். வடக்கிலும் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் கொலை குற்றவாளி விடுவிப்பு பிழையென்று விமர்சித்தனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான, அர்த்தங்கள் மிகுந்த ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார். மன்னிப்பின் மாண்பைப் பற்றி அவர் பேசியுள்ளார்.

அந்த ட்வீட்டுடன் ராஜீவ் காந்தியின் பேச்சு அடங்கிய வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி பகிர்ந்தார்.

அதில் ராஜீவ் காந்தி, “இந்தியா ஒரு பழமையான நாடு. ஆனால் இன்னும் இளமையுடன் இருக்கிறது. பெரும்பாலான இளைஞர்களைப் போல் பொறுமையின்றி இருக்கிறது. நானும் இளமையானவன் தான். எனக்கும் ஒரு கனவிருக்கிறது. நான் வலிமையான, சுதந்திரமான, தற் சார்புடைய இந்தியாவைப் பற்றிக் கனவு காண்கிறேன். மனிதகுலத்திற்கான சேவையில் உலக நாடுகளில் முன்னணியில் இந்தியா இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன். அந்தக் கனவை நனவாக்க நான் உறுதிபூண்டுள்ளேன். அர்ப்பணிப்பு, கடின உழைப்புடன், மக்களின் கூட்டு உறுதியுடன் இதைச் செய்வேன்” என்று பேசியிருக்கிறார்.

ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். அவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இன்று அவரது 32வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது மறைவையொட்டி ஆண்டுதோறும் இந்த நாள் தீவிரவாத எதிர்ப்பு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *